வெளியிடப்பட்ட நேரம்: 11:49 (04/10/2018)

கடைசி தொடர்பு:18:07 (04/10/2018)

``நோயால கஷ்டப்படுற குழந்தைகளுக்கு பொம்மை செஞ்சு கொடுக்கிறேன்!'' - 4 ம் வகுப்பு இஷானா

`அம்மா பொம்மை பிசினஸ் வேணாம். அதை ஒரு சர்வீஸாகப் பண்றேன். இந்த மாதிரி ஹாஸ்பிட்டலில் இருக்கும் கிட்ஸுக்கு பொம்மைகளை கிஃப்ட் பண்ணலாம்'னு சொன்னேன்.

``நோயால கஷ்டப்படுற குழந்தைகளுக்கு பொம்மை செஞ்சு கொடுக்கிறேன்!'' - 4 ம் வகுப்பு இஷானா

``எனக்கு டாய்ஸ்னா ரொம்பப் பிடிக்கும் அக்கா. எனக்கு மட்டுமில்லே என் எல்லா ஃப்ரெண்ட்ஸுக்கும்தான்" என மழலை பொழியும் இஷானா, சென்னையைச் சேர்ந்த 4 ம் வகுப்பு சிறுமி. டெடி பியர், மிக்கி மவுஸ், என விதவிதமான சாஃப்ட் டாய்ஸ்களைச் செய்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மருத்துவமனைகளில் சந்தித்து பொம்மைகள் பரிசாக அளிக்கிறார்.

``என் அம்மா பிசினஸ் வுமன். எப்பவும் பிஸியா இருப்பாங்க.  எனக்கு போர் அடிக்கிற டைம்ல  அம்மா வாங்கிக்கொடுத்த பொம்மைகளை கட்டிப்பிடிச்சுப்பேன். அம்மா வீட்டில் இல்லாத நேரம் டாய்ஸ்தான் எனக்கு எல்லாமே. ஒருநாள் இந்த டாய்ஸ்களை நாமே செய்யலாமேனு நினைச்சேன். ஆன்லைன் பார்த்து சாக்லெட் பேப்பர், நூல், க்ளேவில் செய்ய ஆரம்பிச்சேன். தினமும் ஸ்கூல் ஹோம்வொர்க் முடிச்சதும், புதுசா ஒரு பொம்மையைச் செய்துபார்ப்பேன். என் ஆர்வத்தைப் பார்த்த பக்கத்து வீட்டு ஆன்ட்டி, சாஃப்ட் டாய்ஸ் செய்யச் சொல்லித் தந்தாங்க. அது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்துச்சு. அப்புறம் பழகிருச்சு. `நாமே கத்துக்கிட்டா 500 ரூபாயில் வாங்கற பொம்மையை 200 ரூபாய்க்குள்ளேயே செய்துடலாம்'னு ஆன்ட்டி சொன்னாங்க. அப்புறம், விதவிதமா செஞ்சு வீடு முழுக்க அடுக்கிட்டேன். பாருங்க'' என அழகாக கைகளை விரித்துக் காண்பிக்கிறார் இஷானா.

பொம்மைகள்

இஷானாவைக் கட்டியணைத்துப் பேச ஆரம்பிக்கிறார் அம்மா திவ்யா. ``வீடு முழுக்க இஷானா செஞ்ச பொம்மைகளைப் பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். ஸ்கூல் முடிஞ்சு வந்ததுமே கடகடன்னு ஹொம்வொர்க் முடிச்சுட்டு, டாய் டிசைன் பண்ணிட்டிருப்பா. முன்னாடி டிவியில் கார்ட்டூன் பார்த்துட்டிருந்தவள், இப்போ `ஸாரி, உங்களைப் பார்க்க டைம் இல்லேன்'னு சொல்லிட்டா. ஃப்ரெண்ட்ஸ் பிறந்தநாளுக்கு இவளே செய்த பொம்மைகளை கிஃப்ட் பண்ணுவா. ஒருநாள் எங்க வீட்டுக்கு வந்த பிசினஸ் ஃப்ரெண்ட், இதையே ஒரு பிசினஸா பண்ணலாம்னு விளையாட்டாகச் சொன்னார். எனக்கும் ஒரு ஸ்பார்க் வந்துச்சு. ஐடியாவை இஷானாகிட்ட சொன்னேன். ஆனால், யோசிக்க டைம் கேட்டாள்'' என்றபடி மகளைப் பார்க்கச் சிரிப்புடன் தொடர்கிறார் இஷானா.

``மம்மி அப்படிக் கேட்டதும், அட நாமளும் பிசினஸ் வுமனானு தோணுச்சு. ஆனாலும் யோசனையுடனே இருந்தேன். அப்போதான் அம்மாவின் ஃப்ரெண்ட் ஒருத்தருக்கு உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிட்டலுக்குப் பார்க்கப்போனோம். அப்போ அவங்களுக்கு ஒரு பொம்மையைச் செய்து எடுத்துட்டுப் போனேன். அதைப் பார்த்து அவங்க ரொம்ப ஹேப்பி ஆகிட்டாங்க. அந்தப் பொம்மையை அவங்களின் நியூ கம்பெனி எனச் சொன்னாங்க. உடனே எனக்கு ஒரு யோசனை வந்துச்சு. வீட்டுக்கு வந்ததும், `அம்மா பொம்மை பிசினஸ் வேணாம். அதை ஒரு சர்வீஸாகப் பண்றேன். இந்த மாதிரி ஹாஸ்பிட்டலில் இருக்கும் கிட்ஸுக்கு பொம்மைகளை கிஃப்ட் பண்ணலாம்'னு சொன்னேன்.

``உடனே மம்மி என்னைக் கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணி, ஓ.கே சொன்னாங்க. ஒரே வாரத்தில் நிறைய பொம்மைகள் செய்தேன். வீக் எண்ட்ல அடையாறு கேன்சர் ஹாஸ்பிட்டலுக்கு அம்மா கூட்டிட்டுப் போனாங்க. அங்கே இருந்த குழந்தைகளுக்குப் பொம்மைகளைக் கொடுத்தேன். அவங்க எல்லோரும் ரொம்ப ஹேப்பி ஆகிட்டாங்க. ஒரு அண்ணா, `எனக்குத் தினமும் கரன்ட் ஷாக் வைக்கிறாங்க. அப்போ எனக்குப் பயங்கரமா வலிக்கும். இனி அப்படி வலிக்கும்போது இந்தப் பொம்மையைக் கட்டிப்பிடிச்சுப்பேன்'னு சொன்னார். அதைக் கேட்டு எனக்கு அழுகை வந்துருச்சு. இன்னும் நிறைய அண்ணா, அக்காக்களுக்கும் செய்ய ஆரம்பிச்சேன். இப்போ, நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு ஹாஸ்பிட்டலுக்குப் போய் டாய்ஸ் கிஃப்ட் பண்றேன். சீக்கிரமே ஹோம் குழந்தைகளுக்கும் செஞ்சுக் கொடுப்பேன். இந்தத் தீபாவளிக்கு அம்மாகிட்ட டிரெஸ் வேணாம். அந்தப் பணத்துல, டாய்ஸ் செய்யறதுக்கான மெட்டீரியல் வாங்கிக்கொடுங்கனு சொல்லியிருக்கேன்'' என்கிறார் இஷானா என்கிற இந்தக் குட்டி தேவதை.


டிரெண்டிங் @ விகடன்