வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (04/10/2018)

கடைசி தொடர்பு:15:00 (04/10/2018)

கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்துக்கும் ரெட் அலர்ட் - தொடரப்போகும் கனமழை!

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி அதிதீவிர கனமழை பெய்யும் எனப் பேரிடர் மேலாண்மை இயக்குநரகம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கனமழை

அடுத்து வரும் 3  நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் தற்போது மிதமான மழையும், ஆங்காங்கே கனமழையும் பெய்து வருகிறது. இதேபோல் தமிழகத்தின் பிற்பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் உட்பட அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் வருகிற 7-ம் தேதி மிகக் கனமழை இருக்கும் எனப் பேரிடர் மேலாண்மை இயக்குநரகம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அன்றைய தினம் 25 செ.மீ  அளவுக்கு மழைபெய்யும் எனவும், குறைந்த நேரத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நிவாரண முகாம்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், அபாயகரமான பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே கேரளாவுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க