வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (04/10/2018)

கடைசி தொடர்பு:12:53 (04/10/2018)

‘சிகிச்சை பெறும் திருமுருகன் காந்தி' - ஸ்டாலின் நேரில் சந்திப்பு

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திருமுருகன் காந்தியை நேரில் சந்தித்து பேசியுள்ளார் ஸ்டாலின். 

ஸ்டாலின்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து ஐ.நா. சபையில் பேசியதற்காக, கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி நாடு திரும்பியதும் பெங்களூர் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார் மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக கைது செய்யப்பட்ட அவர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி அவருக்குக் கடுமையான உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டதில் வயிற்று வலி, வாயு பிரச்னை, மூச்சுத் திணறல், அல்சர் போன்ற பல்வேறு உடல்நலக் கோளாறுகள் இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர், வழக்கு விசாரணைக்காகச் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் திருமுருகன் காந்தி. அப்போது அவருக்கு போதிய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என்பதை அவரே செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து கடந்த 1-ம் தேதி எழும்பூர் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றங்கள் அவருக்கு ஜாமீன் வழங்கின. தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை இன்று காலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முன்னதாக திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.