வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (04/10/2018)

கடைசி தொடர்பு:14:37 (04/10/2018)

`மீனவர்கள் நாளை முதல் கடலுக்குச் செல்லவேண்டாம்' - சென்னை வானிலை ஆய்வு மையம்!

மீனவர்கள் நாளை முதல் 8-ம் தேதி வரையில் தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, குமரிக் கடல் பகுதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், `தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் தமிழகம் மற்றும் இலங்கை அருகே நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. அடுத்த 3 தினங்களைப் பொறுத்தவரையில் மீதமான மழையும் ஓரிரு முறை கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் அக்டோபர் 5-ம் தேதி காற்றத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும், அந்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

பிறகு புயலாக மாறி ஓமன் வழியே நகரக்கூடும் என்பதால், மீனவர்கள் வரும் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையில் தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, குமரிக் கடல் பகுதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம். மேலும், ஆழ்கடல் மீனவர்கள் அக்டோபர் 5-ம் தேதிக்குள் கரைக்கு திரும்பிட வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் குள்ளம்பாடியில் 11 செமீ மழையும், திருச்செந்தூரில் 10 செ மீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.