வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (04/10/2018)

கடைசி தொடர்பு:14:08 (04/10/2018)

`வார்டு மெம்பர்கூட ஆகமாட்டார் நடிகர் விஜய்' - தனியரசு எம்.எல்.ஏ!

நடிகர் விஜய்யால் ஒரு வார்டு மெம்பர் கூட ஆகமுடியாது என எம்.எல்.ஏ தனியரசு காட்டமாக விமர்சித்துள்ளார்.

தனியரசு

சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று திருப்பூரில் உள்ள அவரது நினைவகத்துக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. நினைவகத்தில் உள்ள குமரனின் சிலைக்கு தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், திருப்பூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா மற்றும் காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ தனியரசு உள்ளிட்டோர் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ தனியரசு, ``சினிமாவில் யாரோ எழுதிக்கொடுத்த வசனங்களைப் பேசியும், யாரோ எழுதிய பாடல்களுக்கு வாயசைத்தும் நடித்தவர்கள் எல்லாம் தமிழகத்துக்கு முதலமைச்சராக ஆசைப்படலாமா?. தமிழ்நாட்டுக்கு அவர்கள் செய்த தியாகங்கள்தான் என்ன?. ஏற்கெனவே முதலமைச்சராகும் கனவில் துடிக்கும் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும்கூட மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டு, தற்போது நிற்கதியாக அஞ்சி ஓடுகிற நிலையில் இருக்கிறார்கள். இதில் நடிகர் விஜய் அவர் வசிக்கும் பகுதிக்குக்கூட வார்டு மெம்பராக வந்துவிட முடியாது. இனியும் கோடம்பாக்கத்திலிருந்தோ, சாலிகிராமத்திலிருந்தோ முகத்தில் அரிதாரம் பூசிக்கொண்டு ஒருவர் கூட அரசியலுக்கு வரமுடியாது என்பதுதான் உண்மை. அப்படி வந்தாலும் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்" என்றார்.