வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (04/10/2018)

கடைசி தொடர்பு:16:21 (04/10/2018)

விபத்து நடந்து 54 மணி நேரத்துக்குப் பிறகே தெரிந்தது... கல்லட்டிச் சாலையில் கவனம் தேவை.. ஏன்?

மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதி. வாகனப் போக்குவரத்தும் குறைவு. விபத்து நடந்ததை யாராவது பார்த்தால் மட்டுமே வெளியுலகத்துக்குத் தெரியவரும். இல்லையென்றால், யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

விபத்து நடந்து 54 மணி நேரத்துக்குப் பிறகே தெரிந்தது... கல்லட்டிச் சாலையில் கவனம் தேவை.. ஏன்?

தகை கல்லட்டிச் சாலையில் வாகனம் விபத்துக்குள்ளாகி, சென்னையைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர். இருவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்திலேயே மிகவும் ஆபத்தான சாலை, கல்லட்டிச் சாலை. உதகையிலிருந்து மைசூருக்குச் செல்ல, இரு வழிகள் உள்ளன. பேருந்து, லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் கூடலூர் சென்று முதுமலை, பண்டிப்பூர், குண்டல்பேட், நஞ்சன்கூடு வழியாக மைசூருக்குச் செல்லலாம். இப்படிச் சென்றால் முதுமலையை அடைய கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆகும். இன்னொரு பாதை, கல்லட்டிச் சாலை. இந்தச் சாலையில் நாம் 1 மணி நேரத்திலேயே முதுமலையை அடைந்துவிடலாம். ஆனால், இந்தச் சாலை அபாயகரமானது. மாலை 6 மணிக்குமேல் வாகனப் போக்குவரத்து தடைசெய்யப்படும் சாலை இது.

உதகை கல்லட்டிச் சாலை விபத்து

சிறிய ரக பேருந்துகள் உதகையிலிருந்து மசினக்குடி வரை இயக்கப்படுகின்றன. 36 கொண்டை ஊசி வளைவுகள் உடைய சாலை இது. உதகை, 6,000 அடி உயரத்தில் உள்ளது. மசினக்குடி, முதுமலை ஆகியவை குறைந்த உயரத்தில் இருப்பவை. அப்படியே அதலபாதாளத்தில் இந்தச் சாலை இறங்கிச் செல்லும். பொதுவாக சமவெளிப் பகுதிகளில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு, கல்லட்டிப் பாதையின் அபாயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பல இடங்களில் `வாகனங்களை இரண்டாவது கியரில் இயக்கவும்' என்ற அறிவிப்புப் பலகைகள் காணப்படும். ஆனாலும், இந்தச் சாலையில் வேகமாகச் சென்று வளைவுகளில் திரும்புவது குஷியைத் தரும். அதனால், இந்தச் சாலையில் சமவெளிப் பகுதியில் இயக்குவதைப்போலவே இயக்குவார்கள். 

கல்லட்டிப் பாதையில் வாகனங்களை இயக்கும்போது, அதிகமாக பிரேக் பிடிக்கக் கூடாது. இரண்டாவது கியரிலேயே சென்றால் வளைவுகளில் பிரேக் அதிகளவில் பிடிக்கத் தேவையில்லை. ஆனால், வாகன ஓட்டிகள் 4-வது அல்லது 5-வது கியரில் வாகனத்தை இயக்குவார்கள். ஒவ்வொரு வளைவுக்கும் பிரேக் பிடிப்பார்கள். கல்லட்டிப் பாதையில் 35-வது வளைவுக்கு முன்னதாக சமவெளிச்சாலைபோலவே ஒரு பகுதி உள்ளது. சாலை சமமாக உள்ளது என நினைத்து, டிரைவர்கள் ஆக்ஸிலிட்டரை மிதிப்பார்கள். இந்த இடம் முடிவடையும் பகுதிதான் மிகவும் அபாயகரமான 35-வது வளைவு.

உதகை கல்லட்டிச் சாலை விபத்து

ஏற்கெனவே 34 வளைவுகளில் பிரேக் அழுத்தியிருக்க, பிரேக் டிரம்கள் சூடாகி இந்தப் பகுதியில் பிரேக் ஃபெயிலியர் ஆக வாய்ப்பு அதிகம். சாலை தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு வாகனம் அதலபாதாளத்துக்குள் பாய்ந்துவிடும். மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதி. வாகனப் போக்குவரத்தும் குறைவு. விபத்து நடந்ததை யாராவது பார்த்தால் மட்டுமே வெளியுலகத்துக்குத் தெரியவரும். இல்லையென்றால், யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

சென்னை இளைஞர்களை மசினக்குடி காட்டுக்குள் காணவில்லை என்றதுமே, முதலில் இந்த இடத்தில்தான் தேடியிருக்கிறார்கள். உள்ளே வாகனம் உருக்குலைந்து கிடந்துள்ளது. விபத்து நடந்து 54 மணி நேரம் கழித்தே சடலங்களையும், உயிருடன் இருந்த இருவரையும் மீட்டுள்ளனர். 

உதகை கல்லட்டிச் சாலை விபத்து

இந்த இடத்தில், இதுவரை ஆயிரத்துக்கும்  மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்துள்ளன; 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். கல்லட்டிச் சாலை முழுவதும் `வாகனங்களை தயவுசெய்து இரண்டாவது கியரில் இயக்கவும்' என்று நீலகிரி ஆட்சியர் சார்பாக விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த எச்சரிக்கையையும் மீறி, சென்னையைச் சேர்ந்தவர்கள் வாகனத்தை இயக்கியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

கல்லட்டிச் சாலை த்ரில் நிறைந்ததுதான். எல்லாவற்றையும்விட உயிர் முக்கியம் என்பதைச் சுற்றுலா செல்பவர்கள் உணர வேண்டும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்