வெளியிடப்பட்ட நேரம்: 14:44 (04/10/2018)

கடைசி தொடர்பு:14:44 (04/10/2018)

`மக்கள் நிஜத்தை மட்டும்தான் நம்புவார்கள்' - விஜய் பேச்சால் சீறும் அன்சாரி

இனி கோடம்பாக்கத்தில் அரசியல் தலைவர்கள் உருவாக வாய்ப்பே இல்லை. மக்கள் நிஜத்தை மட்டும்தான் நம்புவார்கள் என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

தமிமுன் அன்சாரி

நாகையில் மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளரும் நாகை எம்.எல்.ஏ.வும் ஆன தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அரசியல் கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், `` தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஆனால், மக்கள் செல்வாக்கோடு மக்கள் பிரச்னைகளை சந்திக்கத் தயாராக இருந்து, ஒரு கட்சியில் சேர்ந்து எம்.எல்.ஏ., எம்.பி., என படிப்படியாக உயர் பதவிக்கு வர வேண்டும். ஆனால், இங்கு சிலர் நேரடியாக முதலைமைச்சர் கனவோடு அரசியல் என்ட்ரி கொடுக்கிறார்கள்.

காவிரி உள்ளிட்ட மக்களின் பல்வேறு போராட்டக் களங்களுக்கு வராத விஜய், ரஜினி போன்ற நடிகர்கள் திரைப்பட வசூலுக்காக மட்டுமே வாய் திறக்கிறார்கள், மக்களின் ஜீவாதாரப் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்காமல் அரசியலில் குதிப்பதற்காக மட்டுமே குரல் கொடுக்கும் நடிகர்களின் பேச்சு, மக்களை ஏமாற்றும் செயல் எனக் கூறினார். சமூக வலைதளங்கள் மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்துகிறது, எனவே, மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது. இனி கோடம்பாக்கத்தில் அரசியலுக்கு வேலை இல்லை, அரசியல் பேசிய கமல், ரஜினியாலும் அரசியலில் காலூன்ற முடியவில்லை. இனி வரும் நாள்களில் கோடம்பாக்கத்தில் அரசியல் தலைவர்கள் உருவாக வாய்ப்பே இல்லை.

முதல்வர் குறித்த கருணாஸ் பேச்சை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் எஸ்.வி.சேகர் மற்றும் ஹெச்.ராஜா உள்ளிட்ட விவகாரத்தில் அலட்சியம் காட்டும் தமிழக அரசு கருணாஸுக்கு மட்டும் நெருக்கடி கொடுப்பது ஏற்புடையதல்ல. உணவு உற்பத்தியை பாதிக்கும் வகையில் நாகை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் செயல்படுத்தினால் மக்கள் எழுச்சிப் போராட்டம் வெடிக்கும் என்றார்."

திரைப்படம் வெளியாகும் நேரத்தில் மட்டும் அரசியலுக்கு வரேன், வரேன் என்று சொல்லும் நடிகர்களின் பட்டியலில் விஜய்யும் இணைந்துள்ளார். மக்கள் நிஜத்தை மட்டும்தான் நம்புவார்கள்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க