வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (04/10/2018)

கடைசி தொடர்பு:15:35 (04/10/2018)

மோடிக்குக் கொடுத்ததே கடத்தல் சிலைதான் - ஆஸ்திரேலியப் பிரதமரை குற்றம் சாட்டும் ஹெச்.ராஜா

 'பிரதமர் மோடிக்கு, ஆஸ்திரேலியப் பிரதமர் வழங்கிய நடராஜர் சிலை, தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சிலை' என்று அதிரவைக்கிறார் ஹெச். ராஜா.
 
ஹெச்.ராஜா
 
திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த, இந்து அறநிலையத்துறை சார்பில் திட்டமிடப்பட்டது. இதற்கான திருப்பணிகள்  நடந்துவருகின்றன.  தற்போது கோயில் திருப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, செடல் மாரியம்மன் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்தார்.
 
கோயிலில் தரிசனம்செய்த பிறகு, ஹெச். ராஜா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார், அப்போது அவர், "இந்து அறநிலைத் துறை இந்துக்களையும் இந்துக் கோயில்களையும் அழிக்கும் துறையாக மாறியுள்ளது. இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் ,இந்துக் கோயில்களுக்குத் திருப்பணி செய்வதற்காக கமிஷன் எதிர்பார்த்துவருகிறார்கள். அதனால் பல கோயில்கள் திருப்பணிகள் செய்யப்படாமல் பாதியிலேயே நிற்கின்றன. இதுபோன்ற அதிகாரிகளின் அலட்சியத்தால், கோயில்கள் பராமரிப்பில்லாமல் உள்ளன.
 
இந்து அறநிலையத் துறையில் இந்து அல்லாதவர் பணியில் இருக்கிறார்கள். அப்படி இருப்பவர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தகுதி நீக்கம்செய்ய வேண்டும். இதுகுறித்த விழிப்பு உணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவேண்டிய அவசியம் இருக்கிறது. திருவண்ணாமலை பகுதியில் உள்ள ஒரு கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை அரசும் ஆட்சியாளர்களும் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.கோயில் நிலங்களை ஆக்கிரமிப்புசெய்பவர்களை, அதிகாரமிக்க பதவியில் இருக்கும் முதல்வரும், அரசும் வேடிக்கை பார்ப்பதுதான் வேதனையாக இருக்கிறது.
 
ஆஸ்திரேலியப் பிரதமர் கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தபோது, நரேந்திர மோடிக்கு இரண்டு நடராஜர் சிலைகளைப் பரிசாக வழங்கினார். அந்தச் சிலைகள், ஆஸ்திரேலியா அரசு அருங்காட்சியகத்தில் இருந்து கொண்டுவந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அந்த சிலைகள் இரண்டும், தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட சிலைகள்" என்றார்.
 
'இந்தியப் பிரதமர் மோடிக்கு, ஆஸ்திரேலியப் பிரதமர் வழங்கிய சிலைகள் கடத்தல் சிலைகள்' என ஹெச். ராஜா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபகாலமாக ஹெச்.ராஜா, காவல்துறை, இந்து அறநிலைத் துறை, தமிழக அரசு, நீதிமன்றங்கள் உள்ளிட்டவற்றை விமர்சித்துப் பேசிய பேச்சுக்கள் வைரலானதைப் போல, பிரதமர் மோடிக்கு கடத்தல் சிலை பரிசாக வழங்கப்பட்டது" என அவர் பேசிய பேச்சும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க