வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (04/10/2018)

கடைசி தொடர்பு:15:20 (04/10/2018)

`ரெட் அலர்ட் குறித்து அச்சப்படத் தேவையில்லை' - வருவாய் நிர்வாக ஆணையர் தகவல்!

ரெட் அலர்ட் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் தெரிவித்துள்ளார்.

சத்திய கோபால்

சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால்,  ``ரெட் அலர்ட் என்பது வானிலை ஆய்வு மையத்தால் அரசுக்கு கொடுக்கப்படும் முன்னெச்சரிக்கைத் தகவல். 7-ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிக கனமழை இருக்குமே தவிர பொதுமக்கள் அச்சப்படும் அளவுக்கு ஒன்றுமில்லை. 7-ம் தேதி சில இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் 24 செ.மீட்டரை விட அதிகம் மழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக எந்தப் பகுதிகள் பாதிக்கப்படும் என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்றார்போல் முன்னெச்சரிக்கையாக நாம் கவனம் செலுத்தி வருகிறோம்.

வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சில தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் தயாராக உள்ளனர். தேவைப்படும் பட்சத்தில் நாம் மேலும் கேட்டுப் பெறலாம். வரும் 6-ம் தேதி அந்த அந்தப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொறுப்பாளர்கள் அதற்கான பணிகளை மேற்கொள்வார்கள். பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் நிவாரண முகாம்களில் மக்களை தங்க வைக்க எல்லா நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். இந்தப் பருவத்தில் மழை அதிகமாக இருக்கும் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை, அணைகளை ஆராய்ந்து வருகிறோம். இதில் 80 சதவிகிதம் நீர் நிரம்பி உள்ள இடத்தில் அதற்கான முன்னெற்பாடுகள் செய்து வருகிறோம்'' என்று தெரிவித்தார்.