வெளியிடப்பட்ட நேரம்: 15:42 (04/10/2018)

கடைசி தொடர்பு:16:28 (04/10/2018)

`மழையை எதிர்கொள்ள நாகை மாவட்டம் தயார்!’ - ஆட்சியர் உறுதி

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை முன்கூட்டியே பொழியத் தொடங்கியுள்ளது. எப்போது புயல், மழை, வெள்ளம் வந்தாலும் தமிழகத்தில் முதலில் பாதிக்கப்படுவது நாகை மாவட்டம்தான். எனவே, மழையை எதிர்கொள்வது தொடர்பாக அனைத்துத் துறைகளையும் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.  

Flood

வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்ட கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது. அப்போது சுரேஷ்குமார், “மழைநீர் எங்கும் தேங்காமல் இருக்க வடிகால்களைத் தூர்வாரி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடிகள், சத்துணவு மையங்கள் போன்றவற்றின் கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எங்கேனும் வெள்ளநீர் உடைப்பு ஏற்பட்டால் அதை உடனடியாகத் தடுத்து நிறுத்திட பொதுப்பணித்துறையினர் போதுமான அளவு மணல் மூட்டைகளை இருப்பு வைத்திட வேண்டும். பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளைப் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய குழுக்களை அமைத்து முன்கூட்டியே கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

பொதுமக்கள் மழைக்காலங்களில் காய்ச்சி வடிகட்டிய நீரைப் பருகிடவும், அவசியமின்றி மழையின்போது வெளியில் செல்வதை தவிர்க்கவும். குழந்தைகள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்லாமல் பார்த்துக்கொள்ளவும். மின்சாதனப் பொருள்களைக் கவனமாகக் கையாளவும், வீடுகளுக்கு அருகே உள்ள சுற்றுப்புறத்தை நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் பராமரிக்க வேண்டும். இடி, மின்னலின்போது திறந்தவெளியிலோ உயரமான மரங்களின் அருகிலோ நிற்கக் கூடாது.  

பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ள 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்புகொள்ள பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்” என்று கூறினார்.