வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (04/10/2018)

கடைசி தொடர்பு:17:40 (04/10/2018)

`கரையேறும் மீனவர்களுக்கு உதவுங்கள்!’ - ரெட் அலர்ட்டை அடுத்து மகாராஷ்டிரா, குஜராத் அரசுகளுக்குக் கோரிக்கை

ரெட் அலர்ட் காரணமாகக் கரைக்கு வரும் குமரி மாவட்ட மீனவர்களுக்கு உதவும்படி மகாராஷ்ட்ரா, குஜராத் போன்ற கடலோர மாநில அரசுகளுக்கும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்துள்ளதாகக் குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

மழை

அரபிக் கடலின் தென் கிழக்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகத் தொடங்கியுள்ளதால் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் வரும் 7-ம் தேதி 'ரெட் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் காற்றுடன்கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நாகர்கோவிலில் இன்று கனத்த மழை பெய்தது. மேலும், மாவட்டம் முழுவதும் மேகமூட்டமாகக் காணப்படுகிறது. இந்தநிலையில் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கரைக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே கூறுகையில், "அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது. இது புயலாக மாறுமா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்பு வரவில்லை. ஆனாலும், அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மழை

எனவே, நாளைக்குள் (5.10.2018) அருகில் உள்ள கரைப்பகுதிக்கு மீனவர்கள் சென்றுவிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். இதுபற்றி கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்குத் தகவல் தெரிவிக்கும்படி கோஸ்ட் கார்ட் மற்றும் கடற்படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரைக்கு வரும் குமரி மாவட்ட மீனவர்களுக்கு உதவும்படி மகாராஷ்ட்ரா, குஜராத் போன்ற கடலோர மாநில அரசுகளுக்கும், மீன் வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்துள்ளோம். ஏதாவது முக்கிய தகவல்கள் இருந்தால் மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும். யாரும் தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம், வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்" என்றார்.