வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (04/10/2018)

கடைசி தொடர்பு:18:20 (04/10/2018)

`5,000 அரசுப் பள்ளிகளை மூடுவதா?' - கொட்டும் மழையில் முழங்கிய புதுக்கோட்டை அரசு ஊழியர்கள்

தமிழகம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் புதுக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கொட்டும் மழையிலும் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியதுடன் 5,000 அரசுப் பள்ளிகள் மூடுவதா என முழங்கினார்.

அரசு ஊழியர்கள்

தமிழக அரசின் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் புதுக்கோட்டை பொதுத்துறை அலுவலக வளாகம் முன்பு அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களான ரெங்கசாமி,மு.ராஜாங்கம்,க.சு.செல்வராசு ஆகியோர் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில், அரசு ஊழியர் சங்கப் பொறுப்பாளர் குமரேசன், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் கணேசன், முதுகலை ஆசிரியர் சங்கத்தின் மணிமேகலை, கல்லூரிப் பேராசிரியர் சங்கம் நாகேஸ்வரன், அங்கன்வாடி ஊழியர் சங்கம் இந்திராணி, சத்துணவு ஊழியர் சங்கம் மலர்விழி, ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் மகேந்திரன், கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏராளமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். சிலர் குடை பிடித்தபடி அரசுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர்.

அரசு ஊழியர்கள்

போராட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் `மன்றம்’ சண்முகநாதன், ``2003 ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பாதுகாப்புடன்கூடிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி, அமைச்சுப் பணியாளர்கள், கண்காளிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகத்தின் பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். சிறப்புக் காலமுறை ஊதியம், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு தொகுப்பூதியமும் கணினி ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியமும் வழங்கப்பட வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனே வழங்கிட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 5,000 அரசுப் பள்ளிகள் மூடுவதை உடனடியாகக் கைவிட்டு, சமூக நீதியைப் பாதுகாத்திட வழிவகை செய்ய வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கக்கூடிய வகையில் வெளியிட்ட பணியாளர்கள் பகுப்பாய்வுக் குழுவை ரத்து செய்திட வேண்டும். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அக்டோபர் 13-ம் தேதி சேலத்தில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடும், நவம்பர் 27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தமும் நடைபெறும்" என்றார். கொட்டும் மழையில் அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டம் புதுக்கோட்டையில் பரபரப்பை உண்டாக்கியது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க