வெளியிடப்பட்ட நேரம்: 17:54 (04/10/2018)

கடைசி தொடர்பு:17:54 (04/10/2018)

`பன்னீர்செல்வத்துக்குக் குறி!’ - ஆறுமுகசாமியின் அடுத்த பிளான்

ஆறுமுகசாமி ஆணையம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையம் ஓர் ஆண்டைக் கடந்துவிட்டது. இந்நிலையில், வரும் அக்டோபர் 24-ம் தேதியோடு ஆணையத்தின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதுவரை ஆணையத்தில் 107 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளார்கள். ஜெயலலிதாவுக்குக் கடைசி நேரத்தில் சிகிச்சையளித்த ரமேஷ்வெங்கட்ராமன், அறுவைசிகிச்சை நிபுணர் வி.எஸ்.ரெட்டி உள்ளிட்டவர்கள் இன்னும் முதற்கட்ட விசாரணைக்கே அழைக்கப்படவில்லை. அதேபோல, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறிய `துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி விசாரணைக்கு இன்னும் ஆஜராகவில்லை. இவர்களோடு அமைச்சர்கள் பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களையும் ஆணையத்தின் தரப்பில் விசாரிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கோரிக்கை வைத்திருந்தார். 

ஆணையமும் அவர்களை விசாரணைக்கு அழைக்க சம்மதம் தெரிவித்துள்ளது. இன்னும் சில தினங்களில் இவர்களை எல்லாம் வரிசையாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உள்ளது. அதற்கு, ஆணையத்திற்குப் போதிய கால அவகாசம் தேவைப்படும் நிலை உள்ளது. இதனால், விசாரணை ஆணையர் நீதிபதி ஆறுமுகசாமி, இன்று அரசுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஆணையத்திற்கு இன்னும் மூன்று மாதங்கள் நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அரசு தரப்பும் இதற்கு சம்மதம் தெரிவிக்கும் என்றே தெரிகிறது. நீடிப்பு உத்தரவு வந்த பிறகு, லண்டனில் உள்ள ரிச்சர்ட் பெய்லிடம் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் விசாரணை நடத்த சிறப்பு வசதிகளையும் ஆணையத்தில் செய்ய உள்ளார்கள். மேலும், ஆணையத்தின் செயலாளராக இருந்த கோமலாவைப் பணிமாற்றம் செய்வதற்கு ஆணையர் ஒப்புக்கொண்டுவிட்டார் என்கிறார்கள் ஆணைத்தின் தரப்பில். அடுத்த மூன்று மாதங்களில் ஆணையத்தின் விசாரணை முழுமைபெற்றுவிடும் என்றே தெரிகிறது.