வெளியிடப்பட்ட நேரம்: 17:53 (04/10/2018)

கடைசி தொடர்பு:17:53 (04/10/2018)

சபரிமலைக்குச் செல்லவிருக்கும் பெண்கள் குழு!#VikatanBreaks

சபரிமலை

கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை கோயிலுக்கு, அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றும் எதிர்த்தும் பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துவருகிறார்கள். பெண்களுக்கான சம உரிமைக்கான இன்னொரு வெற்றி எனச் சமூக ஆர்வலர்கள் கொண்டாடுகிறார்கள். உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்புக்கு, சீராய்வு மனு அளிக்கப்போவதில்லை என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பெண்களுக்கான கருத்துகளைப் பரிமாற போராட்டங்களை முன்னெடுக்கும் சென்னையைச் சேர்ந்த 'மனிதி' அமைப்பினர், சபரிமலைக்குச் செல்வதாகக் கூறியுள்ளனர். முழுக்க பெண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த அமைப்பின் செல்வியிடம் பேசினோம்.

மனிதி செல்வி

 "மனிதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களிலிருந்தும் சிலர் எங்களின் சபரிமலைப் பயணத்தில் இணைந்துகொள்வதாகத் தெரிவித்துள்ளனர். அக்டோபர் 18 அன்று சபரிமலையில் நடை திறக்கும் நாள். அன்றைய தினம் அங்கே இருக்கும் வகையில் பயணத்தைத் திட்டமிட்டுள்ளோம். 48 நாள்கள் விரதம் இருப்பது என்பதை மாற்றி, ஒருநாள் விரதம் போதும் என்கிற அளவில் ஆண்கள் சபரிமலைக்குச் செல்கின்றனர். எங்களின் பயணக் குழுவில் பலரும் கடவுள் நம்பிக்கைகொண்டவர்கள். அவர்கள் விரதமிருந்து வருவது அவர்களின் விருப்பம். எங்களைப் பொறுத்தவரை, பெண்களுக்கான உரிமையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதை நடைமுறைப்படுத்த விரும்புகிறோம். கேரள அரசு, மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும், வழிபட வருபவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. எனவே, கேரள அரசுக்கு எங்கள் பயணம் குறித்துத் தெரிவித்து, உரிய பாதுகாப்பு அளிக்குமாறு கோரி கடிதம் அனுப்ப இருக்கிறோம்" என்றார்.