வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (04/10/2018)

கடைசி தொடர்பு:20:13 (04/10/2018)

`4 வருடங்களாக இழப்பீடு இல்லை’ - ராமநாதபுரத்தில் சாலையை அகற்ற உத்தரவிட்ட நீதிமன்றம்!

உரிய இழப்பீடு வழங்காததால் நிலத்தின் மீது போடப்பட்ட சாலையை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. 10 நாள்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது.

நிலம்

ராமநாதபுரம் ஓம் சக்தி நகரைச் சேர்ந்தவர் விஜயன். மாடகோட்டா என்ற இடத்தில் 1,483 சதுர அடி நிலத்தை அவர் வாங்கியுள்ளார். சாலை மேம்பாடு திட்டத்துக்காக 303 சதுர அடி நிலத்தை கையகப்படுத்துவதாகவும் அதற்கான இழப்பீடு தருவதாகவும் அரசு தெரிவித்தது. ஆனால் அரசு சார்பில் குறிப்பிடப்பட்ட நிலத்தைவிட 3 மடங்கு நிலம், அதாவது 1180 சதுர அடி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது. இதை எதிர்த்து விஜயன் ராமநாதபுர மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார்.

கையகப்படுத்தல்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சாலையை அப்புறப்படுத்தி பாதிக்கப்பட்டவரிடம் நிலத்தை ஒப்படைக்க உத்தரவிட்டார். இதுதொடர்பாக அரசு தரப்பில் உரிய இழப்பீடு வழங்கப்படும் என நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், 4 வருடங்களாகியும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. சாலையை அப்புறப்படுத்தி, பாதிக்கப்பட்டவர் நிலத்தை மீட்டுகொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ஆக்கிரமிக்கப்பட்ட சாலையை அகற்ற நீதிமன்ற உத்தரவோடு பாதிக்கப்பட்ட விஜயன் சென்றார். அப்போது, 10 நாள்களுக்குள் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அரசு தரப்பில் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, சாலையை அப்புறப்படுத்தும் பணி கைவிடப்பட்டது.