வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (04/10/2018)

கடைசி தொடர்பு:20:30 (04/10/2018)

`புகார் கொடுத்தும் பயனில்லை’ - கள்ளச்சாராய விற்பனைக்கெதிராகப் பொங்கிய மக்கள்!

திருவாரூர் மாவட்டத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயப் பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்த பொதுமக்கள் தெருக்களில் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் அருகே பண்ணை விளாகம் கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனை பல நாள்களாக நடைபெற்று வருகிறது. கள்ளச்சாராயத்தை அதே ஊரைச் சேர்ந்த அரசியல் கட்சிப் பிரமுகர் ரவி மற்றும் அவரின் தம்பி நெடுமாறன் ஆகியோர் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். இந்தச் செயலுக்கு அந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் கண்டிப்பு தெரிவித்தும் அவர்கள் கள்ளச்சாராய விற்பனையை நிறுத்திக்கொள்ளவில்லை.  

இதுகுறித்து கிராம மக்கள் பலமுறை நன்னிலம் வட்டாட்சியர் மற்றும் நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் கள்ளச் சாராய விற்பனை குறைந்தபாடும் இல்லை, நடவடிக்கையும் ஏதும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பண்ணை விளாகம் கிராம மக்கள், பெண்கள், மாணவர்கள் உட்பட குடும்பத்தோடு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி வளாகம் பகுதியில் உள்ள கருவை காட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராயப் பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்துகொண்டு வந்து, அதைக் கைகாட்டி என்ற இடத்தில் சாலையில் வீசி கால்களால் மிதித்தும் உடைத்தும் அவர்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.