வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (04/10/2018)

கடைசி தொடர்பு:21:02 (04/10/2018)

`அனுமதி இல்லாமல் இயக்கம்!’ - கோவை ரேபிடோ டாக்ஸிக்கு செக் வைத்த ஆட்டோ ஓட்டுநர்கள்

அனுமதியின்றி பயணிகளைக் கட்டணம் வைத்து இயங்கிய, ரேபிடோ பைக் டாக்ஸி நிறுவனத்தின் 4 இரு சக்கர வாகனங்கள் கோவையில் பறிமுதல்செய்யப்பட்டன.

ரேபிடோ

ஒரு கி.மீ-க்கு 3 ரூபாய் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்போடு, கோவையில் கடந்த ஜூன் மாதம் களம் இறங்கியது, ரேபிடோ என்ற பைக் டாக்ஸி. ஓலா டாக்ஸி போலவே, ஆப் மூலம் புக்கிங் செய்யப்படும்  ரேபிடோவுக்கு பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, சமீபத்தில் இந்த ரேபிட்டோ நிறுவனம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஹெல்மெட் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியை கோவை போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் தலைமையில் நடத்தியது. இப்படி குறுகிய காலத்தில், 30-க்கும் மேற்பட்ட பைக்குகளுடன் வெற்றிநடை போட்டுவந்தது.

இந்நிலையில், சொந்த பயன்பாட்டிற்கு வாங்கிய இரு சக்கர வாகனங்களில், கட்டணம் வாங்கிக்கொண்டு பயன்படுத்துவதாகக் கூறி கோவை ஆட்டோ ஒட்டுநர்கள், ரேபிடோ நிறுவனத்தின் 4 இரு சக்கர வாகனங்களைப் பிடித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, 4 பேரிடமும் விசாரித்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர், விதிகளுக்கு மீறி சொந்த வாகனத்தில் பயணிகளை கூட்டிச்செல்ல பயன்படுத்தியதால், அந்த இருசக்கர வாகனங்களைப் பறிமுதல்செய்தார். மேலும், இருசக்கர வாகனத்தை ஒட்டிவந்தவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது.

"ஏற்கெனவே, பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் நாங்கள் ஆட்டோ ஓட்டிவருகிறோம். தற்போது, இந்த பைக் டாக்ஸியால் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். பயணிகளை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச்செல்லும் சேவையளிக்க சட்டத்தில் முறையான இடம் இல்லை. அப்படியிருக்கும்போது, எந்த அடிப்படையில் அவர்கள் செயல்படுகிறார்கள் என்று தெரியவில்லை. அதனால்தான், அவர்களைப் பிடித்துக்கொடுத்தோம்" என்கின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள். 

கோவை வட்டார போக்குவரத்துப் பிரவு இணை ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டோம், "தமிழகத்தில் பைக் டாக்ஸி இயக்க இதுவரை யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை. அப்படி இயங்குவது சட்டத்துக்குப் புறம்பானது. எனவே, பொதுமக்களும் இதுபோன்ற அனுமதியில்லாத ஒன்றைப் பயன்படுத்த வேண்டாம். இது, பாதுகாப்பற்றதும்கூட. இப்படி, இயக்குபவர்கள்மீது அனுமதியில்லாமல் வாகனத்தை இயக்கும் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்படும்" என்றார்.