வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (04/10/2018)

கடைசி தொடர்பு:21:53 (04/10/2018)

திருக்குறளின் `மருந்து’ அதிகாரத்துக்கு இசை வடிவம் கொடுத்த மருத்துவ மாணவர்கள்!

நாகர்கோவில் கோட்டாறில், தமிழ்நாட்டின் ஒரே ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இதில், திருக்குறளில் 'மருந்து' என்ற அதிகாரத்தில் கூறப்படும் மருத்துவ முறை ஒலிபரப்பும் நிகழ்ச்சியை எழுத்தாளர் பொன்னீலன் தொடங்கிவைத்தார்.

எழுத்தாளர் பொன்னீலன்

திருக்குறளில் 'மருந்து' என்ற 95-வது அதிகாரத்தில் மனிதர்களின் உடல் ஆரோக்கியக் குறிப்புகள் உள்ளன. கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அறிவிப்புப் பலகையில், மருந்து என்னும் அதிகாரத்தில் உள்ள திருக்குறளை எழுதி, அதற்கான விளக்கத்தையும் மருத்துவ மாணவர்கள் எழுதிவந்தனர். தினம் ஒரு திருக்குறள், நோயாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. திருக்குறள் மருத்துவத்தில் உள்ள சந்தேகங்களையும் நோயாளிகள் மருத்துவர்களிடம் கேட்டு தெளிவடைந்தனர். இதையடுத்து, திருக்குறளின் மருத்துவ அதிகாரம் முழுவதும் இசையுடன் அமைத்து, அதற்கான விளக்கங்களும் இடம்பெறும் வகையில்  தயாரிக்கப்பட்டது. திருக்குறள் இசையை வெளி நோயாளிகள் பிரிவில் ஒலிக்கவிடும் திட்டம் இன்று தொடங்கியது. இதை, சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் தொடங்கிவைத்தார். ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி டீன் நாராயணன் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் கலந்துகொண்டனர். இந்த முயற்சியால், திருக்குறள் மற்றும் உடல் நலன்மீது மக்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும் என எழுத்தாளர் பொன்னீலன் தெரிவித்தார்.