வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (04/10/2018)

கடைசி தொடர்பு:22:30 (04/10/2018)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சி.பி.ஐ-யிடம் ஆவணங்களை ஒப்படைக்கிறது சி.பி.சி.ஐ.டி!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான 178 வழக்குகளின் விசாரணையை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரும் 7-ம் தேதி சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்துள்ளனர். 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி கடந்த மே 22-ம் தேதி ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால், அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து தடியடியும் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்தத் துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகத் தூத்துக்குடி சிப்காட் காவல்நிலையம், தென்பாகம், வடபாகம், மத்திய பாகம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய காவல் நிலையங்களில் மொத்தம் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் போலீஸார் விசாரணை செய்து வந்த நிலையில், மே மாதத்தின் இறுதியில் இந்த வழக்குகளில் முக்கியமான 5 வழக்குகள் மட்டும் சி.பி.சி.ஐ.டி பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதத்தில் 5 வழக்குகளும் ஒரே வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, இந்த வழக்கை மதுரை சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி மாரிராஜா தலைமையில் 5 டி.எஸ்.பி-க்கள் மற்றும் இவர்களுடன் தடய அறிவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸார் என 100-க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பகுதிகள், வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் ஆய்வையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்  விசாரணையையும் தொடங்கினர். 

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம், இந்தச் சம்பவம் தொடர்பான 243 வழக்குகளில் 173 வழக்குகளை சிப்காட் போலீஸார் பதிவு செய்துள்ளதை ஒரே வழக்காக விசாரணை செய்ய வேண்டும். மீதமுள்ள வழக்குகளைத் தனித்தனியாக விசாரணை செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே, இச்சம்பவம் தொடர்பான 5 முக்கிய வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் இந்த 173 வழக்குகள் தொடர்பான ஆவணங்களைப் பெற்று விசாரணையைத் தொடங்க ஆயத்தாமாகினர்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, துப்பக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் தூத்துக்குடியில் விசாரணையைத் தொடங்க தயாராக உள்ளனர். இந்நிலையில், சி.பி.ஐ அதிகாரிகளிடம் வழக்கை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு 40 நாள்களுக்குப் பிறகு தற்போது , அந்த 178 வழக்குகளுக்கான ஆவணங்களை  வரும் 7-ம் தேதி சி.பி.ஐ அதிகரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்துள்ளனர்.  

   

நீங்க எப்படி பீல் பண்றீங்க