வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (04/10/2018)

கடைசி தொடர்பு:23:00 (04/10/2018)

`கெமிக்கல் ஆலையை மூடுங்கள்!’ - கொந்தளிக்கும் காரைக்குடி மக்கள்

சிவகங்கை மாவட்டம் கோவிலூரில் செயல்பட்டு வரும் கெமிக்கல் ஆலையை மூடக்கோரி 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

போராட்டம் 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோவிலூர் கெமிக்கல் ஆலையால், அதைச் சுற்றியுள்ள 7 ஊராட்சி மக்களும், காரைக்குடி நகர் மக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஆலையில் இருந்து வெளியேறும் விஷ வாயு தண்ணீரால் விவசாயம் பொய்த்துபோய்விட்டது. கண்மாய்த் தண்ணீர் மாசுபட்டதால் விவசாயத்துக்கு பயன்படாத வகையில் மாசடைந்திருக்கிறது. இந்த ஆலையைச் சுற்றியுள்ள கிராமப் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் உடல்ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். காரைக்குடி மக்களின் குடிநீர் ஆதாராமக விளங்கும் சம்பை ஊற்று இதனால் மாசடைந்திருக்கிறது. இளநீர் சுவை கொண்ட சம்பை ஊற்று நீர், இந்த ஆலையின் கழிவுகளால் நாசமடைந்து கெட்டுவருகிறது. இவற்றுக்கெல்லாம் காரணமான கெமிக்கல ஆலையை மூட வேண்டும் என கோவிலூரில் 7 கிராம மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினார்கள்.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் காரைக்குடி எம்.எல்.ஏ ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ ராமசாமி, "கலெக்டர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரண்டு வாரம் கால அவகாசம் கேட்டிருக்கிறார்கள். அதற்குள் ஆலை மூடவில்லையென்றால், நாம் ஆலையை முற்றுகையிடுவோம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைப்போல் துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்களுக்குப் பயப்பட மாட்டோம். நான் உயிருக்குப் பயந்தவன் அல்ல. அதேபோன்றுதான் போராட்டக்களத்தில் இருக்கும் மக்களும்’’ என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசினார். 
 
போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா பேசும்போது, "நாங்கள் நீண்டகாலமாக இந்த ஆலையை மூட வேண்டுமென்று போராடி வருகிறோம். ஆகையால், நான் ஆலையை முற்றுகையிடுவேன். போலீஸ் எல்லாம் கம்பெனியிடம் மாதம் மாதம் பணம் வாங்குகிறீர்கள். நீங்கள் எல்லாம் என்னோடு சேர்ந்து போராடுங்கள்’’ என்றார். இதனால், போலீஸாருக்கும் பழ.கருப்பையாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக அவருடன் சேர்த்து 11 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
தாமாக முன்வந்து கைதான பழ.கருப்பையாவை, `உங்கள் மீது வழக்கு எதுவும் போட முடியாது. நீங்க வீட்டுக்குப் போகலாம்’  என்று கூறி மாலை 6 மணிக்கு மேல் போலீஸார் அனுப்பி வைத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க