வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (05/10/2018)

கடைசி தொடர்பு:07:23 (05/10/2018)

குடிநீருக்கு மின் இணைப்பு கேட்ட மாணவர்கள் - துரிதகதியில் செய்துகொடுத்த தம்பிதுரை!

தங்கள் பள்ளியில் குடிநீருக்கு மின் இணைப்பு கேட்டு மாணவர்கள் கோரிக்கை வைக்க, அதை உடனே நிறைவேற்றி அசத்தி இருக்கிறார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. 
 


கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் மக்களவை துணை சபாநாகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனோடு வந்து மக்களின் குறைகளைக் கேட்டு வருகிறார். அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் பொதுமக்களை அவர்களின் பகுதிக்கே நேரில் சென்று பார்த்து அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்று அப்பகுதிகளில் உள்ள அடிப்படைவசதிகள் குறித்து ஆய்வு செய்து, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வருகிறார்.


 

அதனடிப்படையில் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அப்போது, மூக்கணாங்குறிச்சி ஊராட்சியில் வீரணாம்பாளையத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடிநீருக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தங்களுக்கு குடிநீர் பெறுவதில் சிரமம் உள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையைக் கேட்ட தம்பிதுரை, அங்கிருந்தே மின்சாரவாரிய செயற்பொறியாளரைத் தொடர்புகொண்டார். 'உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கு குடிநீர் வழங்க ஏதுவாக மின் இணைப்பு வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டார். இதனால், சுறுசுறுப்பான மின்சார வாரியத்துறையின் உதவிப் பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான பணியாளர்கள் வீரணாம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு உடனே மின் இணைப்பு வழங்கினர். அந்தப்பள்ளிக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டாருக்கு மின் இணைப்பு
வழங்கப்பட்டது. ``எங்களது ஒரு வருட கோரிக்கையை உடனே நிறைவேற்றிய தம்பிதுரை சாருக்கு நன்றி" என்று மாணவர்கள் உற்சாகமாகத் தெரிவித்தனர்.