வெளியிடப்பட்ட நேரம்: 01:33 (05/10/2018)

கடைசி தொடர்பு:07:26 (05/10/2018)

பாரம்பர்ய கிராமத்தை கண்முன் நிறுத்திய தூத்துக்குடி கல்லூரி மாணவிகள்!

நம்மிடம் மறைந்து வரும், பாரம்பரிய கலாச்சாரத்தை நினைவுபடுத்தி போற்றும் வகையில்  தூத்துக்குடியில் கல்லூரி மாணவிகள் பாரம்பரிய கலாச்சாரத்தை கண்முன்  நிறுத்தினர். 

கல்லூரி மாணவிகள்

தூத்துக்குடி ஏ.பி.சி., மகாலட்சுமி மகளிர் கல்லூரியில்,``அன்றைய வாழ்வும் அறிவியலும் களம் காண வா ராணி  வா” என்ற பெயரில் பாரம்பர்ய திருவிழா நடைபெற்றது. பெண்கள்  மட்டுமே பங்குபெறும் வகையில் நடைபெற்ற  இந்த விழாவைப் பார்வையிட வந்தவர்களை, மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் முழங்க முளைப்பாரி ஏந்தி வரவேற்றனர். இதைத் தொடர்ந்து மைதானத்தில் ஒரே நேரத்தில் 400 மாணவிகள் கரகாட்டம், பரதநாட்டியம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் கலந்த நடன நிகழ்ச்சிகளை நடத்தினர்.

கலைகள்

இந்த விழாவில் அமைக்கப்பட்டுள்ள உள் அரங்கத்தில் தாயம், பல்லாங்குழி, கழற்சிக்காய், கிச்சுகிச்சு தாம்பளம், பாம்புகட்டம், கோலி போன்ற மூளைக்கு வேலை, உளவியல், சமூக வளர்ச்சி மற்றும் உடலியல் சார்ந்த பண்புகளை அதிகரிக்கும் விளையாட்டுக்களும், வெளி அரங்கத்தில், பாண்டி, பம்பரம், கயிறு தாண்டுதல், பூப்பந்து, உறியடி, டயர் உருட்டுதல், கயிறு இழுத்தல் போன்ற பாரம்பர்ய விளையாட்டுக்களும் நடந்தன. 

பாரம்பரிய திருவிழா

கிராமத்தை நினைவுகூரும் வகையில், குதிரைவண்டி, பொங்கல் திருவிழா, பரணில் இருந்து விவசாய நிலத்தைப் பாதுகாத்தல் மாதிரி கிராமத்தை மாணவிகள் வடிவமைத்திருந்தனர். அதே போல், பழங்காலத்தில் அதிகமாக உபயோகிக்கப்பட்ட பாக்குவெட்டி, குத்துகால், அஞ்சறைப்பெட்டி, செப்பு பாத்திரங்கள், படி உழக்குகள், மரக்கால், பழங்கால கேமராக்கள், கிராமபோன், பழங்கால வால்வு ரேடியோக்கள் போன்றவை காட்சிப்படுத்தி இருந்தனர். பெண்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் ஆச்சர்யத்துடன் பார்வையிட்டுச் சென்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க