வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (05/10/2018)

கடைசி தொடர்பு:07:40 (05/10/2018)

கரூரில் ஒரே நாளில் இரண்டு விபத்துகள்... உதவிப் பேராசிரியர்கள் உட்பட 4 பேர் பலி!

 

 

 

கரூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு விபத்துச் சம்பவங்களில் இரண்டு கல்லூரி உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர். 'கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை எண்-7 யை சரியாகப் பராமரிக்காததால்தான் இப்படி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்ச்சேதங்கள் ஏற்படுகிறது' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் லேசான மழை பெய்துகொண்டிருந்தது. நாமக்கல்லைச் சேர்ந்தவர் முகமது பரீத். இவர் கரூர் தளவாபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உதவிப்பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். தினமும் கார் மூலம் கல்லூரிக்கு வந்து செல்வார். இன்று வழக்கம்போல, காரில் கல்லூரிக்கு வந்தபோது, வழியில் இருந்த பரமத்திவேலூரில் இருந்து தன்னுடன் கல்லூரியில் பணியாற்றும் விநாயகி என்ற உதவிப் பேராசிரியையும் காரில் அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு வந்திருக்கிறார். கார் கரூர் நாணப்பரப்பு என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது,  கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்பில் விபத்துமோதி, எதிரே வந்த லாரி மீதும் பலமாக மோதியது. இந்த விபத்தில் முகமது பரீத், விநாயகி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டுத் தப்பியோடிவிட்டார். விபத்து குறித்து அறிந்த வேலாயுதம்பாளையம் காவல்நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல, அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூரில் மதுரையில் இருந்து நாமக்கல் சென்ற மற்றொரு கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் தனியார் தொண்டு நிறுவனக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மதுரையிலிருந்து 4 பேர் கார் மூலம் சென்றுகொண்டிருந்தனர். கார் கரூர் அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் பயணித்த மதுரையைச் சேர்ந்த அருளானந்தம், விருதுநகரைச் சேர்ந்த ஜோசப்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், அந்தக் காரில் பயணித்த மதுரையைச் சேர்ந்த செல்வம், விருதுநகரைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் ஆகியோர் காயமடைந்தனர். இருவரும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கரூரில் ஒரே நாளில் இருவேறு சாலை விபத்துகளில் 4 பேர் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுபற்றி நம்மிடம் பேசிய கரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர், ``கரூர் மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை எண்-7 எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலை. கனரக வாகனங்கள் தொடங்கி சாதாரண வாகனங்கள் என்று தினமும் பல ஆயிரம் வாகனங்கள் இந்தச் சாலையில் செல்கின்றன. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை என்பதால், சரக்குப் போக்குவரத்து பிரதானமான உள்ள சாலையாக இருக்கிறது. அதேபோல தினசரி விபத்துகளுக்குப் பெயர் பெற்றதாக மாறி வருகிறது. காரணம் இந்த தேசிய நெடுஞ்சாலையில் முறையான பராமரிப்பு இல்லை. பல இடங்களில் சாலைகள் பெயர்ந்தும், அகலம் குறைவாகவும் இருக்கிறது. கரூர் மாவட்ட எல்லையான ஆண்டிபட்டிகோட்டை பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் சுங்கவரி கேட் அமைத்துக் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் ஆங்காங்கே சாலைகள் சேதமாகக் காணப்படுவதுடன், விபத்து பகுதிகளில் முன் அறிவிப்பு பதாகைகள் வைக்காமல் இருப்பதும் விபத்துகள் அதிகம் ஏற்படக் காரணமாக இருக்கிறது. அதேபோல், அரவக்குறிச்சி சாலைப் பிரிவு, மண்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலம் அமைத்து அணுகுசாலைகள் அமைக்காததாலும், ஏகப்பட்ட விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை" என்றார்கள்.