வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/10/2018)

கடைசி தொடர்பு:07:43 (05/10/2018)

``ஆட்சி மாற்றம் வரும்; அமைச்சர்கள் சிறைக்குப் போவார்கள்!” - கோவையில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி

உதயநிதி ஸ்டாலின்

``தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். இப்போது அமைச்சர்களாக உள்ளவர்கள் சிறைக்குப் போவார்கள்" என்று  கோவையில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள பனப்பட்டி கிராமத்தில் அ.தி.மு.க அரசின் ஊழலைக் கண்டித்து தி.மு.க சார்பாகக் கண்டன பொதுக்கூட்டம்  நடந்தது. இதில் தி.மு.க-வின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் மு.கண்ணப்பன், உதயநிதி ஸ்டாலின், மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டனர். 

கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ``இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த நிர்வாகிகளிடம் நான் மேடையில் ஏறவில்லை. கீழே தொண்டர்களுடன் தொண்டராக அமர்ந்துகொள்கிறேன் என்று சொன்னேன். ஆனால், என்னைக் கட்டாயப்படுத்தி மேடையில் ஏற்றிவிட்டார்கள். மேடையில் இருப்பதால்தான் உங்களைப்பார்க்க முடிகிறது.

நீதிமன்றத்துக்குச் சென்று போராடித்தான் இந்தப் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வாங்கி இருக்கின்றோம். தி.மு.க என்றாலே போராட்டம்தான். தனக்கான கடைசி இடத்தைக்கூடக் கருணாநிதி போராடித்தான் பெற்றார். பொதுக்கூட்டம் நடத்தவும் போராடித்தான் அனுமதி வாங்கியுள்ளோம்.

அம்மா வழியில் ஆட்சி நடக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லிவருகிறார். இந்நேரம் ஜெயலலிதா உயிரோடு இருந்தால் பெங்களூரு சிறையில்தான் இருந்திருப்பார். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். இப்போது அமைச்சர்களாக உள்ளவர்கள் அப்போது சிறையில் இருப்பார்கள். கோவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.. இல்லை இல்லை, அவர் எஸ்.பி. ஊழல்மணி. அவர் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளாட்சித்துறையில் ஏராளமான  ஊழல். கோவையில் உள்ள 8 குளங்களில் ஆகாயத்தாமரை அகற்றுகிறேன் என்ற பெயரில் பலகோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. தமிழகத்தில் மக்கள் நிம்மதியாக இல்லை என்பதால்தான் போராடுகின்றனர். ஆனால், அதிக போராட்டம் இங்குதான் நடக்கிறது என முதல்வர் அதையே பெருமையாகச் சொல்கிறார்.

சசிகலா காலில் விழுந்து குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்து முதல்வரான எடப்பாடி பழனிசாமி. கருணாநிதி வாரிசு என்பதால்தான் ஸ்டாலின் பதவிக்கு வந்துவிட்டார் என்று சொல்கிறார். உழைப்பால் உயர்ந்தவர் ஸ்டாலின். ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அவரின் மகன்  உதயநிதி வரிசையில் வந்துவிட்டார் எனவும் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆமாம்.. வரிசையில்தான்  நிற்கிறேன். எங்கு நிற்கிறேன் தெரியுமா? கடைசியில் தொண்டர்களுடன் தோள்கொடுத்து நிற்கிறேன். பதவிக்கு வந்துதான் எதையும் சாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை" என்றார்.