வெளியிடப்பட்ட நேரம்: 05:15 (05/10/2018)

கடைசி தொடர்பு:07:51 (05/10/2018)

``ஆயிரக்கணக்கில் அனுப்பப்படும் அஞ்சல் அட்டைகள்!” - ஏழு பேர் விடுதலைக்காக வித்தியாசமான முயற்சி

விடுதலை

‘தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்று பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையை, அஞ்சல் அட்டையில் எழுதி ஆளுநருக்கு அனுப்பி அதிரடி கிளப்பி வருகின்றனர் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தினர்.

கொலை வழக்கு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 27 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161-ன் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என செப்டம்பர் 9-ம் தேதி, தமிழக அரசு ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி, அதைத் தமிழக ஆளுநரின் இசைவுக்காக அனுப்பி வைத்தது. 3 வாரங்களுக்கு மேலாகியும், ஆளுநர் இன்னும் அவரின் முடிவைத் தெரிவிக்கவில்லை. இது சம்பந்தமாக தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆளுநருக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், ‘தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்றுப் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையை, ஆயிரக்கணக்கான அஞ்சல் அட்டையில் எழுதி ஆளுநருக்கு அனுப்பி அதிரடி கிளப்பி வருகின்றனர்.

 

கொலை வழக்கு

ஈரோட்டில் இதற்காக முதல் முயற்சியைக் கையில் எடுத்திருக்கும் மக்கள் சிவில் உரிமைக் கழகத்துக்கு பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் ஆதரவளித்து வருகின்றனர். மேலும், வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரும், 7 பேர் விடுதலைக்காக அஞ்சல் அட்டையில் கோரிக்கைகளை எழுதிக் கையொப்பமிட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வருகின்றனர். இதுவரைக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டைகள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி ஈரோடு ஜவான்பவனில், அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும் கலந்துகொண்டு ஆளுநர் மாளிகைக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் பிரமாண்ட நிகழ்வு நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவை தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலத் தலைவர் கண.குறிஞ்சியிடம் பேசினோம். ``அரசியலமைப்புச் சட்டம் 161 பிரிவு அடைப்பிடையில் இவர்களை விடுதலை செய்வதற்கு எவ்விதத் தடையும் இல்லை. பிரிவு 161 என்பது மாநிலத்துக்கு உரித்தான கட்டற்ற அதிகாரம் கொண்டது. அந்த அடிப்படையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி 3 வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆளுநர் இன்னும் தன்னுடைய இசைவை தெரிவிக்கவில்லை. இவ்வழக்கில் சிறையிலிருக்கும் 7 பேரையும் விடுதலை செய்யவேண்டுமென்பது தமிழக மக்களின் அழுத்தமான கோரிக்கையாகும். எனவே, அதைத் தெரிவிக்கும் பொருட்டு ஈரோட்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான அஞ்சலட்டைகள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட உள்ளது. அக்டோபர் 6-ம் தேதி அனைத்துக் கட்சிகள் மற்றும் அமைப்புகளும் சேர்ந்து ஈரோட்டிலிருந்து ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் மிகப்பெரிய நிகழ்வு நடைபெறவிருக்கிறது. தமிழக அரசின் தீர்மானம் மற்றும் மக்களின் கோரிக்கையைப் புரிந்துகொண்டு ஆளுநர் உடனடியாக தன்னுடைய இசைவை தெரிவிக்க வேண்டும்” என்றார்.

கொலை வழக்கு

ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் பணியில் தீவிரமாக இருக்கும் தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.வே.பொன்னையனிடம் பேசினோம், ``7 பேரையும் விடுவிக்க வேண்டுமென்ற தமிழக மக்களின் விருப்பத்துக்காகத் தமிழக அமைச்சரவை போடப்பட்ட தீர்மானத்தை, எந்தவித மக்கள் அதிகாரத்தையும் பெறாத ஆளுநர் முடக்குகிறார். இது என்ன நியாயம். இது 7 பேருடைய வாழ்க்கைப் பிரச்னை. அவர்களுடைய வாழ்க்கை பறிபோய்க்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டினுடைய அரசியலமைப்பு வழங்கிய மிகப்பெரிய உரிமையை இந்த ஆளுநர் முடக்குகிறார். இனியும் ஆளுநர் 7 பேர் விடுதலை விவகாரத்தில் காலம் தாழ்த்தக் கூடாது” என்றார்.

சாமானிய மக்களின் குரலுக்கு ராஜ்பவன் அசைந்து கொடுக்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.