வெளியிடப்பட்ட நேரம்: 02:15 (05/10/2018)

கடைசி தொடர்பு:07:57 (05/10/2018)

``ஃபேஸ்புக், வாட்ஸ்அப்களில் உள்ளவர்களுக்கு முகவரி உள்ளதா?” – பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப்களில் உள்ளவர்கள் சுய லாபத்துக்காகப் பதிவு செய்கிறார்கள். அவர்களில் ஒருவருக்காவது முகவரி  இருக்கிறதா என மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். 
 
பொன்.ராதாகிருஷ்ணன்

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தார்.

அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ``பிரதமர் மோடி ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் நாடு முழுவதும் 8 கோடி கழிவறைகளைக் கட்டியுள்ளார். அது மட்டுமின்றி 2022-க்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்க்க முடிவு செய்துள்ளார். மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி செயல்படுத்திய பல்வேறு திட்டங்களின் பலனாகத்தான் அவருக்கு விருது கிடைத்துள்ளது. அதை இந்த நாட்டின் 130 கோடி மக்களுக்கும் அவர் அர்ப்பணித்துள்ளார்" எனக் கூறினார்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், ``மோடி ஆட்சி அமைந்ததும்,  நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்குப் பாதுகாப்பு மற்றும் ஊக்கம் அளிக்கும் வகையில் பயிர் பாதுகாப்பு திட்டத்தில் பல்வேறு மாறுதல் செய்யப்பட்டுள்ளது. விவசாய நிலத்தில் ஏற்படும் பாதிப்புகள், விவசாயப் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், விளைந்த பிறகு உண்டாகும் பாதிப்புகளுக்கு இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்டதால், விவசாயிகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் பயிர் பாதிப்புக்கு இந்தியாவிலே தமிழகம்தான் அதிக அளவிலான இழப்பீடு தொகை பெற்றுள்ளது. இது சிறப்பு அல்ல. இதுபோன்ற இழப்பு ஏற்படக்கூடாது" என்றார்.

ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக தி.மு.க. போராட்டங்களை முன்னெடுக்கிறதே என்கிற கேள்விக்கு பதிலளித்தவர், ``ஹைட்ரோ கார்பன் போன்ற எந்தத் திட்டங்களைப் பற்றிப் பேசுவதற்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அருகதை இல்லை. ஒருபுறம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்கிறார்கள். உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. நம்மிடம் உள்ள பொருள்களை எடுக்காமல் வெளிநாடுகளில் இருந்து வாங்க வேண்டும் என்றால் தி.மு.க., காங்கிரஸ் அந்நிய நாட்டின் கைக்கூலிகளாகவும், ஏஜென்டுகளாகவும் செயல்படுகிறார்கள். மக்களைத் தேவையில்லாமல், அச்சுறுத்தி, ஒரு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தவே, இதுபோன்ற தோற்றத்தை உருவாக்கும், கேவலமான அரசியலில் இருந்து தி.மு.க., காங்கிரஸ் விடுதலைப் பெற வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விவசாயிகள் எதிர்க்கும்போது, திரும்பத் திரும்ப செயல்படுத்துவதாகக் கூறுகிறார்கள். விவசாயிகள் கடலிலா விவசாயம் செய்கிறார்கள். ஒரு வி‌ஷயத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். நம் நாட்டு விவசாயிகளை எந்தெந்த மாநிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கிறார்கள் எனக் சுற்றுப்பயணம் அழைத்துச் சென்று காண்பிக்க வேண்டும். ஃபேஸ்புக், வாட்ஸ்அப்களில் பலர் சுய லாபத்துக்காகப் பதிவு செய்கிறார்கள். இவர்களில் ஒருவருக்காவது முகவரி உள்ளதா. தமிழகத்தை சீரழிக்க ஒரு மிகப்பெரிய கூட்டமே உள்ளது.

நடிகர் விஜய், தான் முதல்வரானால் நடிக்க மாட்டேன் என்கிறார். முதல்வர் பதவியில் இருந்து யாராவது நடிப்பார்களா. அரசியல் தலைவர்கள் பற்றாக்குறை ஏற்படும்போது, நான் முதல்வர் ஆவேன், மக்கள் வரவேற்கிறார்கள் என இதுபோன்ற கருத்து கூறுகிறார்கள். எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகவும், ஜெயலலிதா ஆகவும் முடியாது. இன்று மக்களிடம் செல்வாக்கு பெற்ற நடிகராக இருப்பவர் ரஜினி மட்டும் தான். நடிகர் ரஜினிகாந்த், இன்னும் கட்சியே தொடங்கவில்லை. ஆனால், மக்கள் மத்தியில் ஒரு நல்ல மனிதர் என்ற எண்ணம் உள்ளது. அவர் பா.ஜ.க.வுக்கு ஆதரவாகச் செயல்படுகிறாரா என எனக்குத் தெரியாது. ஆனால், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். பலர் பத்திரிகை மற்றும் சினிமா துறையில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். ஏதோ தமிழகம் புறம்போக்கு நிலம் போல் நாதியில்லாமல் கிடப்பது போன்று சிந்தனையுடன்  அரசியலுக்குள்ளே வரக்கூடாது. இருப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள், லஞ்சம் வாங்குபவர்கள் என்று குறிப்பிட்டு பொத்தாம் பொதுவாகக் கூறக்கூடாது. அப்படி யாரும் இருந்தால் அவர்களைக் குறிப்பிட்டுக் காட்ட வேண்டும். அவ்வாறு கூறினால் நடிகர் விஜய்க்கு நானே நேரில் சென்று மாலை அணிவிப்பேன். ரஜினி நல்ல மனிதர் என்ற உணர்வு மக்களுக்கு உள்ளது.

ராகுல்காந்தி பா.ஜ.க.வுக்கு எதிராக 2-வது விடுதலைப் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார். அவருக்கு விடுதலை கிடைக்காது. இதுபோன்ற கற்பனையில்தான் அவர் போராட்டம் நடத்துவார். வரும் தேர்தலில் இப்போது இருப்பதைவிட அதிக  இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெறும். பா.ஜ.க. 350 எம்.பி-க்களையும், , தேசிய ஜனநாயக கூட்டணி மூலமாக 400-க்கும் மேற்பட்ட எம்.பி-க்களைப் பெற்று பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்கும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க