வெளியிடப்பட்ட நேரம்: 03:45 (05/10/2018)

கடைசி தொடர்பு:08:01 (05/10/2018)

``மிருகங்கள் கூட தன் குட்டியை எதுவும் செய்வதில்லை!” – தூக்குத் தண்டனை விதித்த நீதிபதி உருக்கம்

சின்னமனூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு தூக்குத்தண்டனை விதித்து தேனி மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கைதி

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது காமாட்சிபுரம். இக்கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 1.12.2014 அன்று பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பாததைத் தொடர்ந்து சிறுமியைத் தேடும் உறவினர்கள் மறுநாள், அருகில் இருந்த தோட்டம் ஒன்றின் கிணற்றில் இருந்து அச்சிறுமியைச் சடலமாக மீட்டனர். வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கியது காவல்துறை. விசாரணையில் அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது தெரியவந்தது. காமாட்சிபுரம் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (25), இராபின் (எ) ரவி (23), குமரேசன் (19) ஆகிய மூவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து கிணற்றில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. மூவரும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கானது தேனி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த நிலையில், நேற்று (4.10.2018) நீதிபதி திலகம், சிறுமியைக் கொலை செய்த குற்றத்துக்காக சுந்தர்ராஜ், இராபின் (எ) ரவி, குமரேசன் ஆகிய மூவருக்கும் தூக்குத் தண்டனையும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை மற்றும் 50,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவர்

தண்டனை விவரத்தை நீதிபதி திலகம் அறிவிக்கும்போது, ``மிருகங்கள் கூட தன் குட்டியை எதுவும் செய்வதில்லை!” என்று கூறியதாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். சுருளி இரட்டைக் கொலை வழக்குக்குப் பிறகு, தேனி மாவட்ட நீதிமன்றத்தில் தூக்குத்தண்டனை விதிக்கப்படும் இரண்டாவது வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.