வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (05/10/2018)

கடைசி தொடர்பு:08:15 (05/10/2018)

கிடப்பில் போடப்பட்ட வைகை அணை – ஆண்டிபட்டி கூட்டுக்குடிநீர் திட்டம்!

பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டும் மின் இணைப்பு வழங்காததால் வைகை அணை - ஆண்டிபட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த முடியாமல் உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆண்டிபட்டி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

கூட்டு குடிநீர் திட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியானது மொத்தம் 18 வார்டுகளை கொண்டது. இதன் தண்ணீர் தேவையை குன்னூர் வைகை ஆற்றில் இருந்து கொண்டுவரப்படும் கூட்டுக்குடிநீர் திட்டம் நிவர்த்தி செய்துகொண்டிருந்தது. இந்த நிலையில், குன்னூர் ஆற்றில் தண்ணீர் வராத நேரங்களில் பேரூராட்சியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவர். வறட்சி காலங்களில் பொதுமக்களின் தண்ணீர் தேவையைக் கருத்தில் கொண்டு வைகை அணையில் இருந்து ஆண்டிபட்டிக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை இரண்டு ஆண்டுக்கு முன்னர் அரசு அறிவித்து, 14 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஜம்புலிபுத்தூர் கிராமத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையமும் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், இந்த நிலையத்துக்கு மின் இணைப்பு வழங்காததால் ஆண்டிபட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல், மக்களுக்குப் பதிலும் சொல்ல முடியாமல் பேரூராட்சி அதிகாரிகள் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில், ஜெனரேட்டர்கள் உதவியுடன் சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஆண்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி கூறும்போது, ``வரும் 10 -ம் தேதிக்குள் மின் இணைப்பு வழங்குவதாக மின்சாரத்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். அதன் பின்னர், ஆண்டிபட்டி மக்களின் பல ஆண்டு கோரிக்கையான வைகை அணை - ஆண்டிபட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்!” என்றார்.