வெளியிடப்பட்ட நேரம்: 09:16 (05/10/2018)

கடைசி தொடர்பு:10:17 (06/10/2018)

தொடங்கியது மழை; சென்னை ஏரிகளின் நிலை? - விளக்கும் மருத்துவர் புகழேந்தி

சென்னை மாநகரத்தின் மையப்பகுதியில் ஏறக்குறைய 3,000 நீர்நிலைகள் இருப்பதாக சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் புகழேந்தி தெரிவித்துள்ளார். 

சென்னை

இது பற்றி பேசிய புகழேந்தி, ``அக்டோர் 7-ம் தேதி தமிழகத்துக்கு கனமழை `ரெட் அலார்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக மழை இருந்தால் 84 இடங்கள் 5 அடிக்கு மேல் மூழ்கும். மேலும் 515 இடங்கள் 5 அடிக்கும் கீழ் பாதிப்பு உள்ளது. இதில் முக்கிய கேள்வி என்னவெனில் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்பட முதன்மைக் காரணம் என்ன என்பதே. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட முதன்மைக் காரணமாக நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு மற்றும் மழைநீர் வழிந்தோட முறையான வடிகால் வசதி இல்லாமல் இருப்பதும்தான் முதன்மைக் காரணமாக பாராளுமன்ற எம்.பி-க்கள் அறிக்கை எண் 198 மற்றும் CAG அறிக்கை ஆகியவை தெரிவிக்கின்றன. 

சில தினங்களுக்கு முன் சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் விரிவாக விவாதிக்கப்பட்டு, தயார்நிலையில் மாவட்ட நிர்வாகம் இருப்பதாகக் கூறப்பட்டாலும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் குறித்து எதுவும் விவாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. குறிப்பாக அதைத் தடுக்க தமிழக அரசு 2007-ம் ஆண்டு சட்டம் இயற்றியும் அதே நிலை இன்னும் தொடர்ந்து கொண்டு இருப்பதுதான் கவலையான விஷயம். நீர்நிலை ஆக்கிரமிப்புகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும், அவரது உதவியாளருக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலம் கேட்டதற்கு பதிலும் இல்லை. 

 தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள ஏரியின் பரப்பளவு 154 ஹெக்டெராக இருந்தது. தற்போது 54 ஹெக்டெராக குறைந்துள்ளது. பெருங்களத்தூரின் பழைய பெயர் பெரும்+குளம் +ஊர் என்றே இருந்தது நமக்கு எத்தனை பேருக்குத் தெரியும். 2007 சட்டம் மூலம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கும்போது அதைப் பற்றி யாரும் பேசாமல் இருப்பது எப்படி சரியாகும். குறிப்பாகத் தாழ்வான பகுதியில் வசிப்பவர்களின் உயிர் மற்றும் பொருள்களின் மீது அக்கரைக் கொண்டு அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சிக்கல்கள் தீரும் என்பதுதானே உண்மை. சென்னை மாநகரத்தின் மையப்பகுதியில் ஏறக்குறைய 3,000 நீர்நிலைகளும் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் 3,600 நீர்நிலைகளும் இருப்பது வெறும் வரலாறாக இருப்பதற்கு மாறாக அதை பராமரிக்கும் உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதன் மூலம் 80 டி.எம்.சி நீர் சேமிக்க முடியும். சென்னையின் நீர்த் தேவையை 20 டி.எம்.சி நீர் மூலம் பூர்த்தி செய்ய முடியும். 2015 சென்னை வெள்ளத்தின்போது 300 டிஎம்சி நீர் வீணாகக் கடலில் கலந்ததற்கு யார் பொறுப்பு? 

1976 -ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது அதைத் தடுக்கும் வழிகள் ``சிவலிங்கம் அறிக்கையில் தெளிவாக இருந்தும் எந்த அரசுகளும் அதைப் பின்பற்ற முன் வரவில்லை ஏன்? அரசு மக்கள் மீது அக்கரை கொண்டுள்ளது என எப்படி கூறமுடியும் ? கோயம்பேடு பேருந்து நிலையமும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளது என்பது அரசுக்குத் தெரியாதா? இந்த விஷயங்களைக் கருத்தில்கொண்டு மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்றும் மக்கள் மேற்சொன்ன கருத்துகளை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.