வெளியிடப்பட்ட நேரம்: 11:26 (05/10/2018)

கடைசி தொடர்பு:11:26 (05/10/2018)

‘ஆட்சியைக் கலைக்க நேரம் கேட்டார் ஓ.பி.எஸ்!’ - ஆதாரத்தை அடுக்கும் தங்க தமிழ்ச்செல்வன்

தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனை சந்திக்க நேரம் கேட்டதாக அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தமிழ்ச்செல்வன்

இது தொடர்பாக தங்க தமிழ்ச்செல்வனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது, ``ஓ.பன்னீர்செல்வம், தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருந்த 2017-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி, சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கக்கூடிய ஒரு பில்டர் வீட்டில், டி.டி.வி தினகரனை ஓ.பி.எஸ் சந்தித்துப் பேசியது உண்மை. அப்போது எடப்பாடியை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு நாம் ஆட்சி அமைக்கலாம் என்றார். அதைக் கேட்டுக்கொண்டு, `சரி பார்த்துக்கொள்ளலாம்.!’ என்று சொல்லி ஓ.பன்னீர்செல்வத்தை அனுப்பிவைத்தார் டி.டி.வி. போன வாரம் அதே பில்டரிடம் சொல்லி, ’அண்ணனைச் சந்திக்க வேண்டும்.!’ என்று நேரம் கேட்கிறார். என்ன விஷயமாகப் பார்க்க வேண்டும் என்று அந்த பில்டர் கேட்டிருக்கிறார். அதற்கு, ’அண்ணன் டி.டி.வி தினகரனை முதலமைச்சராக உட்காரவைத்துவிடலாம். எடப்பாடியை இறக்கிவிடலாம்.!’ என்று கூறியிருக்கிறார். கடந்த முறை சந்திக்க ஏற்பாடு செய்தபோதே நீங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதனால், நீங்களே நேரடியாகப் பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் காந்தி ஜயந்தி அன்று காரில் சென்றுகொண்டிருக்கும்போது என்னிடம் டி.டி.வி தினகரன் கூறினார். திரை மறைவில் இணையலாம் என்று சொல்பவர், மேடையில் நம்மை விமர்சிக்கிறாரே என்று கேட்டார். அதற்கு அடுத்த நாள்தான் கிண்டியில் நடந்த நிகழ்ச்சியில் இந்த விஷயத்தைப் பேசினார் டி.டி.வி. அதன்பின்னர் நேற்று நான் பேசியிருக்கிறேன்” என்றார்.

திருப்பரங்குன்றத்தில் நடந்த நிகழ்ச்சிக்குக் கட்சி நிர்வாகிகள் அதிகமானோர் கலந்துகொண்டதுதான் நீங்கள் இப்படிப் பேசக் காரணம் என ஓ.பி.எஸ் தரப்பு கூறுகிறதே எனக் கேள்வி எழுப்பியபோது, ``திருப்பரங்குன்றம் கூட்டமெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. அதைப்பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.” என்றார்.