வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (05/10/2018)

கடைசி தொடர்பு:12:00 (05/10/2018)

நெல்லையில் மீண்டும் தலைதூக்கும் டெங்கு: தடுக்குமா தமிழக அரசு?

நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கி இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது. 

டெங்கு

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக பருவ மழைக் காலங்களில் டெங்குகாய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. அதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்த போதிலும், கடந்த ஆண்டு கூட 500-க்கும் அதிகமானோர் டெங்கு அறிகுறியுடன் மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

கடந்த ஆண்டு உயிரிழப்புகளைத் தடுக்க சுகாதாரத்துறை கவனம் செலுத்தியது. அத்துடன், நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வீடுகளில் டெங்குவைப் பரப்பும் கொசுக்களை ஒழிக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுகாதாரத்துறையினர் வருவாய்த்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் இணைந்து தடுப்புப் பணிகளில் தீவிரம் காட்டியதுடன், தேங்கிக் கிடக்கும் தண்ணீரை அகற்றவும் நடவடிக்கை எடுத்தனர் 

இந்த ஆண்டு, வடகிழக்குப் பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில், நெல்லை மாநகரப் பகுதிகளில் மட்டும் அல்லாமல் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் டெங்குகாய்ச்சல் அறிகுறிகளுடன் ஏராளமானோர் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். அதில் ஒரு சிலருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு மீண்டும் உருவாகத் தொடங்கி இருப்பது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் சுகாதாரத்துறையினரும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக களம் இறங்கி தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழக அரசும் இந்த விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்தி மீண்டும் டெங்கு பரவாமல் தடுக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.