வெளியிடப்பட்ட நேரம்: 11:36 (05/10/2018)

கடைசி தொடர்பு:11:44 (05/10/2018)

புழல் சிறையில் வெட்டப்பட்ட 200 வாழை மரங்கள்! - தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படும் கைதிகள்

புழல் சிறையில் என்ன நடக்கிறது என்பதை மனித உரிமை ஆர்வலர்களும் நீதியரசர்களும் நேரில் வந்து ஆய்வு நடத்த வேண்டும்.

புழல் சிறையில் வெட்டப்பட்ட 200 வாழை மரங்கள்! - தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படும் கைதிகள்

புழல் சிறையில் அதிகரித்து வரும் கெடுபிடிகளால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் சிறைக் கைதிகள். ' ஒருசிலர் சொகுசாக இருந்த புகைப்படங்களை வெளியிட்டதற்காக, ஒட்டுமொத்த கைதிகளிடமும் கடுமையாக நடந்துகொள்கிறார் கண்காணிப்பாளர் செந்தில்குமார். தற்கொலை மனநிலைக்குக் கைதிகள் வந்துவிட்டனர்' என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். 

சென்னை, புழல் சிறையில் கைதிகள் சிலர் ஆடம்பரமாக வாழ்ந்து வரும் புகைப்படங்கள் அண்மையில் வெளியானது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சோதனையில் நவீன செல்போன்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், ஓட்டல் உணவுகள், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதிகளுக்கு இவையெல்லாம் எளிதாகக் கிடைப்பதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததையடுத்து, அவர்களில் பலர் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில், கோவை சிறையில் இருந்து புழல் சிறையின் கண்காணிப்பாளராக சில நாள்களுக்கு முன் பதவியேற்றார் செந்தில்குமார். இவர் தலைமையில் புழல் சிறையில் அதிரடி சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதில், 29 தொலைக்காட்சிகள், 18 கட்டில்கள், 27 ரேடியோக்கள், குக்கர்கள், பிரியாணி அண்டா, 200 கிலோ பாசுமதி அரிசி, 100 கிலோ பொன்னி அரிசி, மைதாமாவு, சமையல் எண்ணை, பருப்பு வகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சோதனையில் சிக்கிய 18 கட்டில்களும் சிறை மருத்துவமனைக்காகக் கொண்டு வரப்பட்டவை. 

புழல் சிறையில் சொகுசு வாழ்க்கை

`` புழல் சிறையில் சொகுசாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். 29 டி.வி-க்களைப் பறிமுதல் செய்துவிட்டோம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த டி.வி பெட்டிகள் அனைத்தும் விதிமுறைகளின்படி கைதிகளுக்காக ஒதுக்கப்பட்டவை. அரசால் வழங்கப்பட்ட டி.விக்கள்தான் இவை. யாரும் அவற்றை முறைகேடாகக் கொண்டு செல்லவில்லை. கடந்த சில நாள்களாக கைதிகளின் உடமைகளைப் பறித்து வைத்துக்கொண்டனர். கைதிகளால் நிம்மதியாக நடமாட முடியவில்லை. கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவின்பேரில், நேற்று சிறை வளாகத்தில் இருந்த 200 வாழை மரங்களை வெட்டிவிட்டனர்" என விவரித்த மனித உரிமை ஆர்வலர் ஒருவர், 

``புழல் சிறையில் புதிய கண்காணிப்பாளராக பதவியேற்றதில் இருந்தே, கைதிகளுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளைக்கூட மறுக்கிறார் செந்தில்குமார். கடந்த சில நாள்களாக தவறே செய்யாத சிறைக் கைதிகள் மீதும் நடவடிக்கை எடுக்கிறார். 'ஒருவர் செய்த தவறுக்காக நாங்களும் தண்டனை அனுபவிக்கிறோம்' எனக் கைதிகள் அழுகின்றனர். சிறையில் இருக்கக் கூடிய ஆயிரக்கணக்கான கைதிகளில், பலரும் வழக்கறிஞர்கூட வைத்துக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இந்த அதிகாரி ஏற்கெனவே, ஆறு மாதம் காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர். பியூஸ் மானுஷைத் தாக்கிய வழக்கும் இவர் மீது நிலுவையில் இருக்கிறது. எங்களுடைய வேதனையைக் கேட்பதற்குக்கூட ஆள்கள் இல்லை. புழல் சிறையில் என்ன நடக்கிறது என்பதை மனித உரிமை ஆர்வலர்களும் நீதியரசர்களும் நேரில் வந்து ஆய்வு நடத்த வேண்டும். அப்படி யாரும் வராவிட்டால், சில கைதிகள் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துவிட்டனர்" என்றார் குமுறலுடன். 

கைதிகளின் குற்றச்சாட்டு குறித்து புழல் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரிடம் பேசினோம். ``அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. சிறை விதிகளின்படியே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றதோடு முடித்துக்கொண்டார்.