வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (05/10/2018)

கடைசி தொடர்பு:12:15 (05/10/2018)

சிலரால் வேதனைப்பட்ட பிறகுதான் என் அட்வைஸ் மும்தாஜுக்குப் புரிஞ்சது! - மமதி

மமதி சாரி

`பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் நடிகை மும்தாஜ் மற்றும் தொகுப்பாளர் மமதி சாரி தோழிகளானார்கள். இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகும் இவர்களின் நட்பு வலுப்பெற்றுள்ளது. அதுபற்றி மமதி சாரி உற்சாகத்துடன் பகிர்கிறார். 

``எனக்கும் மும்தாஜூக்கும் சுகாதாரம் மற்றும் மனிதநேய விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இதனாலேயே `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நெருக்கம் உண்டாச்சு. போகப்போக எங்களின் பல குணங்கள் ஒரே அலைவரிசையில் இருக்கிறதைப் புரிஞ்சுக்கிட்டோம். ஆட்டோஇம்யூன் கண்டிஷன் (autoimmune condition) என்ற உடல்நலப் பிரச்னை மும்தாஜுக்கு இருக்கிறது. மிகக் குளிர்ந்த மற்றும் சூடான நீரில் கைகளைத் தொட்டு எடுக்கவேண்டும். இதை அந்நிகழ்ச்சியில் இருந்தவரை அவரைத் தினமும் செய்யவைத்தேன். அலர்ஜி பிரச்னை இருப்பதால், சன் ஃப்ளவர் ஆயில், பசுமாட்டுப் பால், கோதுமை ஆகியவை அவருக்கு ஒப்புக்கொள்ளாது. இதற்கெல்லாம் உடன்பட்டுத்தான் போட்டியாளராகத் தேர்வுசெய்தாங்க.

மும்தாஜூக்கு இருந்த உடல்நலப் பிரச்னையைச் சகப் போட்டியாளர்களால் புரிஞ்சுக்க முடியலை. நான் புரியவைக்க டிரை பண்ணியும் பலனில்லை. உணவுப் பற்றாக்குறையால் சில நேரம் பட்டினி இருந்தது, இரவு நேரத்தில் கிச்சன் கிளீனிங் எனப் பல விஷயங்களைச் செய்தோம். நான் எலிமினேட்டாகி வந்த பிறகு, அந்த நிகழ்ச்சியை டிவியில் தொடர்ந்து பார்க்கலை. ஆனால், மும்தாஜின் அண்ணனிடம் போனில் பேசுவேன். மும்தாஜின் செயல்பாடுகள் பற்றிச் சொல்வார்.

மமதி சாரி - மும்தாஜ்

மும்தாஜ் அடிக்கடிக் கோபப்படறதா பலரும் சொல்றாங்க. நியாயமான காரணங்களுக்காகக் கோபப்படும் அவர், அதை உடனே வெளிப்படுத்திடுவார். அந்தக் குணத்தைப் போட்டியாளர்கள் புரிஞ்சுக்காததை நினைச்சு ஒரு தோழியாக வருத்தப்பட்டேன். மும்தாஜ் எலிமினேட்டான அடுத்த நாளே வீட்டுல போய்ப் பார்த்தேன்.

கட்டிப்பிடிச்சு அன்பைப் பகிர்ந்துகிட்டோம். `ஒருவரை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் உறவு கொண்டாட வேண்டாம்'னு `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இருந்தபோதே மும்தாஜிடம் சொன்னேன். சிலரால் வேதனைப்பட்ட பிறகுதான் நான் சொன்னதை உணர்ந்தார். அதைப் பற்றியும் சொல்லி வருத்தப்பட்டார். அவர் குடும்பத்துடன் ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனேன். இப்போ, என்கிட்ட மும்தாஜ் ஆர்வமாகத் தமிழ் கற்றுக்கொள்கிறார். `துப்பார்க்குத் துப்பாய' எனத் தொடங்கும் திருக்குறளைச் சொல்லி மகிழ்ந்தார். எனக்கு நடனம் கற்றுக்கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார். சகோதரிகளாகவும் தோழிகளாகவும் இருக்கோம். எங்கள் தனிப்பட்ட விஷயங்கள் முதல் கரியர் வரை பகிர்ந்துகிட்டோம். ஒவ்வொரு நாளும் எங்கள் நட்பு ஆழமாகிட்டிருக்கு" என மகிழ்வுடன் சொல்கிறார் மமதி சாரி