வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (05/10/2018)

கடைசி தொடர்பு:13:30 (05/10/2018)

சபரிமலை சந்நிதான பாதுகாப்புப் பணியில் பெண் காவலர்கள்! - கேரள டி.ஜி.பி.தகவல்

சபரிமலையில் மண்டல பூஜை காலத்தில் 500 பெண் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். சந்நிதானத்திலும் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெகரா தெரிவித்துள்ளார்.

சபரிமலை

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து இம்மாதம் 16-ம் தேதி சபரிமலைக்கு வரும் பெண்களுக்கான வசதிகள் செய்துகொடுக்க கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரள தேவசம்போர்டு மற்றும் அனைத்துத் துறை சார்பிலும் பெண்களுக்கான வசதிகள் செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேரள டி.ஜி.பி.லோக்நாத் பெகரா கூறுகையில், ``சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக இந்த மாதம் முதல் பெண் போலீஸார் நியமிக்கப்படுவார்கள். கேரள காவல்துறையில் 6000-க்கும் அதிகமான பெண் காவலர்கள் உள்ளார்கள். அதில் 500 பேரை தேர்வு செய்து மண்டல பூஜை காலத்தில் பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்படுவார்கள். காவல்துறைப் பணியில் ஆண் என்றும் பெண் என்றும் பேதமில்லை. வேலை வேறு, கடவுள் நம்பிக்கை வேறு. எனவே, சபரிமலை நடை திறக்கப்பட்டதும் சந்நிதானத்தில் பெண் காவலர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்" என்றார்.