'நீட்' தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் கவனத்துக்கு! - அரசின் யூடியூப் பாட வீடியோக்கள் ரெடி | Tn Scert introduced youtube videos for school children

வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (05/10/2018)

கடைசி தொடர்பு:13:05 (05/10/2018)

'நீட்' தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் கவனத்துக்கு! - அரசின் யூடியூப் பாட வீடியோக்கள் ரெடி

நீட்டில் தமிழக மாணவர்கள் வெற்றி பெற அரசின் யூடியூப் பாட வீடியோக்கள்.

நீட் போன்ற மேற்படிப்புகளுக்கான தேர்வுகளில் புரிதல் அடிப்படையிலான வினாக்களே அதிகம் கேட்கப்படுகிறது. அதனால்தான், தமிழக மாணவர்கள் பின்தங்கிய நிலையில் செயல்படுகின்றனர்' என்ற கருத்து நிலவுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக அரசு இணையத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீட் வீடியோ
 

பாடத் திட்டங்கள் யூடியூப் விடியோ ஆக வெளியிடப்படுகிறது. இதுகுறித்து 11-ம் வகுப்பு ஆசிரியரான விழுப்புரத்தைச் சேர்ந்த திலிப்பிடம் பேசினோம் 

``11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காகத் தமிழக அரசின் சார்பில் 'TN SCERT' https://www.youtube.com/channel/UC7GbVKqHPXww1acL1x9DNQw என்ற யூடியூப் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பக்கத்தில், பாடப்புத்தகத்தில் உள்ள அனைத்துப் பாடங்களும் நேர்த்தியான ஆசிரியர்கள் மூலமாக, எளிமையான முறையில் வீடியோ விளக்கங்கள் உள்ளன. பாடப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு இயலும், தனித்தனி காணொளியாக வெளியிடப்படுவது கூடுதல் வசதி. பள்ளியில் மாணவர்கள் தங்களுக்குப் புரியாத பாடங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் காணொளியில் பார்த்துத் தெளிவடையலாம். இனி, மாணவர்களுக்கு ஒரு பாடத்தில் உள்ள எல்லாத் தகவல் பற்றியும் தெளிவு இருக்கும். ஒரு பாடத்தை நடத்துவதற்குத் தயாராகும் ஆசிரியர்களுக்கும் இந்தப் பக்கம் பயனுள்ளதாக உள்ளது. இதில் உள்ள ஒரு குறைபாடு, எல்லா மாணவர்களுக்கு இணைய வசதி கிடைப்பதில்லை. எனவே, குறிப்பிட்ட பாடவேளையில் ஸ்மார்ட் கிளாஸ் மூலம் இந்த யூடியூப் காணொளியை வெளியிடும்படி பள்ளிகள் திட்டமிடலாம். அல்லது, 12-ம் வகுப்பு இறுதியில் மாணவர்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா லேப்டாப்பை, 11-ம் வகுப்பின் ஆரம்பத்திலே கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

12-ம் வகுப்பு படிக்கும் விருதுநகரைச் சேர்ந்த கண்ணன் என்ற மாணவர், ``பாடத்தை எளிமையாகக் கற்றுக்கொள்ள முடிகிறது. இனி, தனித்தனியாகப் பாடங்களுக்கு டியூஷன் போகத் தேவையில்லை. தமிழக அரசின் இந்த முயற்சி, என்னைப் போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்" என்றார்.