வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (05/10/2018)

கடைசி தொடர்பு:14:30 (05/10/2018)

மதுபாட்டில் கேட்டு மிரட்டும் காவலர் - வைரலாகும் ஆடியோவால் பரபரப்பு

நெல்லை மாவட்டத்தில் பழக்கடைக்காரரை மதுபாட்டில் வாங்கிக் கொடுக்குமாறு வற்புறுத்தும் காவலர் குறித்த ஆடியோ வைரலாகி வருகிறது. இது காவல்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

மதுபாட்டில் கேட்டு மிரட்டுவதாக புகார்

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர், மாரியப்பன். பழக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்க வருகை தந்த நண்பர்களுக்கு விருந்து வைப்பதற்காக 11 மது பாட்டில்களை வள்ளியூரில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து வாங்கிச் சென்றுள்ளார். அப்போது போலீஸார் அவரது வாகனத்தை சோதனையிட்டுள்ளனர். 


டாஸ்மாக் கடையில் இருந்து பில் எதுவும் இல்லாமல் மதுபாட்டில்களை வாங்கிச் சென்ற மாரியப்பனை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், அவரது இருசக்கர வாகனத்தைக் கொடுக்க வேண்டுமானால், மேலும் 10 மதுபாட்டில்களை கொடுக்க வேண்டும் என வள்ளியூர் காவல்நிலைய தலைமைக் காவலர் சதீஷ் என்பவர் மிரட்டுவதாக புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து புகார் அளித்த மாரியப்பன், அதற்கு ஆதரமாக காவலர் சதீஷ் பேசியதற்கான ஆடியோ ஆதாரத்தையும் கொடுத்தார்.

இது குறித்து மாரியப்பனிடம் கேட்டதற்கு, ``எனது வீட்டு நிகழ்ச்சிக்கு வந்த நண்பர்களுக்கு விருந்து வைப்பதற்காக வள்ளியூரிலிருந்து 11 மதுபாட்டில்களை வாங்கிச் சென்றபோது போலீஸார் அவற்றைக் கைப்பற்றியதுடன் எனது வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். என் மீது வழக்கு தொடராமல் இருக்க 25 மதுபாட்டில்களை வாங்கிக் கொடுக்கச் சொன்னார்கள். அதன்படி நான் வாங்கிக் கொடுத்தேன். 

ஆனாலும் என்மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் நான் இரு நபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டேன். எனது இருசக்கர வாகனத்தை கோர்ட்டுக்கு கொண்டு வராமல் இழுத்தடிப்புச் செய்தார்கள். அதைக் கொண்டுவர வேண்டுமானால் மேலும் 10 பாட்டில்களை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் கேட்பதாகச் சொன்னார்கள். என்னைத் தொடர்ந்து போலீஸார் தொந்தரவு செய்ததால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தேன். சம்பந்தப்பட்ட காவல்நிலையம் மீதும் அதில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன்’’ என்றார். 

இதனிடையே, மாரியப்பனிடம் தலைமைக் காவலர் சதீஷ் பேசும் ஆடியோ வெளியாகி இருக்கிறது. அதில் இன்ஸ்பெக்டர் 10 மதுபாட்டில்களை வாங்குமாறு சொல்லியிருக்கிறார் என தலைமைக் காவலர் பேசுகிறார். அந்த ஆடியோ வைரலாக சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளதால், வள்ளியூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் மாவட்ட எஸ்.பி-யான அருண் சக்திகுமார் தலையிட்டு, தவறு செய்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.