வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (05/10/2018)

கடைசி தொடர்பு:13:55 (05/10/2018)

குளத்தை ஆக்கிரமித்து கார் பார்க்கிங்! - நீதிமன்ற உத்தரவை மீறிய கும்பகோணம் நகராட்சி

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஆயிக்குளம் சரித்திர முக்கியத்துவம் பெற்றது. காலப்போக்கில் ஆக்கிரமிப்புக்குள்ளான இக்குளத்தையும் இதன் நீர்வழிப்பாதைகளையும் முழுமையாக மீட்டெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அத்தீர்ப்பை மதிக்காத நகராட்சி நிர்வாகம் இக்குளத்தில் ஒரு பகுதியில் கார் பார்க்கிங் அமைத்து ஆக்கிரமிப்புச் செய்துள்ளதாக இங்குள்ள மக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.


கும்பகோணம்

கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது இந்தக் குளம். இது நகரின் இதயப்பகுதி என்பதால் பிரமாண்டமான வணிக நிறுவனங்கள் இங்குள்ளன. முறையான பராமரிப்பு இல்லாததால் இக்குளம் மேடாகி, திடல் போல் காட்சி அளித்தது. இக்குளத்தின் ஒரு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இருந்தன. நீர்வழிப்பாதைகள், வணிக நிறுவனங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அடைப்பட்டு கிடக்கிறது.

மகாமகத்தின்போது கும்பகோணத்தில் உள்ள 44 குளங்களையும் முழுமையாக மீட்டெடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். ஆயிக்குளம் உள்ளிட்ட அனைத்துக் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் முழுமையாக அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. குளத்தில் இருந்த குடிசைகளை எல்லாம் நகராட்சி நிர்வாகம் முழுமையாக அகற்றியது. ஆனால், நீர்வழிப்பாதைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. குளத்தில் 30 சதவிகிதம் பகுதியை ஆக்கிரமித்து கார் பார்க்கிங் செய்வதற்கான தரையை உருவாக்கியுள்ளது.

இப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் பலன் அடைவதற்காக, அவர்களிடம் ஏதோ ஒரு வகையில் ஆதாயம் பெற்றுக்கொண்டு, வாகன நிறுத்தும் இடமாக இதை நகராட்சி அதிகாரிகள் மாற்றியுள்ளனர். இதனால் ஆயிக்குளத்தின் உண்மையான கொள்ளளவு சுருக்கப்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தன் விருப்பம்போல் செயல்படுவதாக இங்குள்ள மக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.