வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (05/10/2018)

கடைசி தொடர்பு:14:15 (05/10/2018)

`எண்ணூர் துறைமுக விரிவாக்கத்துக்கு க்ரீன் சிக்னல்!' - ஆபத்தில் அலையாத்திக் காடுகள்

எண்ணூர் காமராஜர் துறைமுக விரிவாக்கத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த முடிவு சூழலியலாளர்கள் மத்தியில் அலையாத்திக் காடுகள் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணூர் துறைமுகம்

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை விரிவாக்குவதற்கு 2017-ம் ஆண்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. துறைமுக விரிவாக்கத்தோடு மேலும் அதிகமான தொழிற்சாலைகளைக் கொண்டுவரவும் அந்த அறிவிப்பில் திட்டங்கள் இணைக்கப்பட்டிருந்தன. துறைமுக விரிவாக்கம் செய்வதுபோல் கடலோரங்களில் பரந்திருக்கும் ஆயிரக்கணக்கான அலையாத்திக் காடுகளை ஆக்கிரமிக்கத் திட்டமிடுவதாகத் துறைமுக நிர்வாகத்தை எதிர்த்துக் கடலோர வளங்களுக்கான அமைப்பு மத்தியக் கடலோர வளங்கள் மேலாண்மையில் கடந்த ஆண்டு மே மாதம் புகார் தெரிவித்திருந்தார்கள். அதைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பரிந்துரையால் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை ஆய்வுசெய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

அந்த ஆய்வறிக்கை வருவதற்கு முன்பே கடந்த மே மாதம் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. இருப்பினும் திட்டத்திலிருக்கும் சில சூழலியல் சிக்கல்களையும், அதை மறுபரிசீலனை செய்யவும் வேண்டுமென்று நிபுணர்குழு பரிந்துரைத்தது. ``துறைமுக நிர்வாகம் தமிழ்நாடு மின்வாரியம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி சங்கம் போன்றவற்றிடமிருந்து நிலங்களை வாங்கியுள்ளார்கள். அதில் மக்களைப் பாதிக்குமாறு எந்தத் திட்டங்களும் இல்லை" என்று சுற்றுச்சூழல் துறையால் கூறப்படுகிறது. ஆனால், ஆயிரக்கணக்கான ஏக்கர்களுக்குப் பரந்திருக்கும் சதுப்புநிலங்களைத் தொழிற்சாலை நிலங்களாக மாற்றத் துறைமுக நிர்வாகம் திட்டமிடுவதாக கடலோர வளங்களுக்கான அமைப்பு எதிர்த்துக்கொண்டிருக்கிறது. இந்த ஆய்வறிக்கை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் 24-ம் தேதி நடந்தது. அந்த ஆலோசனைக் கூட்டத்தின்படி தற்போது எண்ணூர் காமராஜர் துறைமுக விரிவாக்கத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த முடிவு சூழலியலாளர்கள் மத்தியில் அலையாத்திக் காடுகள் குறித்த கவலையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.