வெளியிடப்பட்ட நேரம்: 13:52 (05/10/2018)

கடைசி தொடர்பு:15:27 (05/10/2018)

ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி! - பின்னணி நிலவரம்

அ.தி.மு.க அரசுக்கு நெருக்கடிகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பதினெட்டு பேரின் தீர்ப்பு இன்னும் சில தினங்களில் வர உள்ள நிலையில் அந்த தீர்ப்பு எப்படி வரும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்துவருகிறது. இந்த நிலையில், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த மேலும் மூன்று எம்.எல்.ஏ-க்களுக்கும், திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் உள்ளிட்ட நான்கு பேருக்கு நோட்டிஸ்விட சபாநாயகர் தனபால் முடிவு செய்திருந்தார். ஆனால், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லை என்று கருணாஸ் சட்டசபை செயலாளரிடம் நோட்டீஸ் அளித்து அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
 

இந்த நிலையில், தமிழக அரசியல் சூழ்நிலையில் பரபரப்பு ஏற்பட்டு வரும் நிலையில் பிரதமரை சந்திக்க முதல்வர் நேரம் கேட்டிருக்கிறார். இன்று காலை முதல்வரை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது 18 எம்.எல்.ஏ-க்கள் விவகாரம் குறித்தும், தினகரன் தரப்பு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து பொன்னாரிடம் ஆலோசனை செய்துள்ளார் முதல்வர். பொன்னார் கொடுத்த அறிவுரையை ஏற்று ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளார் முதல்வர். இன்று மாலை ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து 18 எம்.எல்.ஏ-க்கள் விவகாரம் குறித்தும், சபாநாயரின் அதிகாரம் குறித்தும் பேச உள்ளார். மேலும், பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தொடர்பாகவும் அவர்கள் விவாதிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கவர்னரிடம்  ஆலோசனையை பெற்றுக்கொண்டு நான்கு எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் வாய்ப்பும் இருக்கிறது என்கின்றனர்.