வெளியிடப்பட்ட நேரம்: 13:51 (05/10/2018)

கடைசி தொடர்பு:13:51 (05/10/2018)

ரெட் அலர்ட்: கோவையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பகுதிகள் இவைதாம்...! #Rain

தமிழகம் முழுவதும் வருகின்ற 7-ம் தேதி மிகக் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளனர். இதனால், அரசுத்தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கோவையில் கடந்த சில நாள்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

கோவை நீர்நிலை

இந்நிலையில், அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டுச் சங்கத்தின் செயலாளர் பி.கே.செல்வராஜ், ``நாம் அமைக்கும் பாலங்கள் மற்றும் நீர்வழிப் பாதைகள் பழைய கணக்கீட்டு முறையில் தண்ணீர் வரத்தைச் செய்கிறோம். முன்பு, மழை வானிலிருந்து பெய்யும். அப்படிப் பெய்யும் மழை மரங்களின் மீது விழும், மரங்களிலிருந்து செடிகள் மீது விழும், புற்கள் மீது விழும், பின்னர் மண்ணில் பட்டு மெதுவாக தன் பயணத்தைத் தொடரும். ஆனால், தற்போது பெரும்பாலான மழைத்துளிகள் நேரடியாக நீர்நிலைகளுக்கு வருகிறது. எனவே, மழைக்காலங்களில் நம்முடைய கட்டுமானப் பணிகள் தாண்டி பெரும் சேதங்களை விளைவிக்கிறது. இதுகுறித்து வல்லுநர்கள் ஆராய்ந்து மறு கணக்கீடுகள் செய்ய வேண்டும்.

குறிப்பாக கௌசிகா நதிப்பாதையில், இடிகரை, அருவா செட்டி புதூர் கோவில்பாளையம் பகுதிகளில் கௌசிகா நதி கரையோரம் வசிக்கும் வீடுகளில் இருக்கும் மக்கள் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கௌசிகா நதி தெக்கலூர் பகுதியில் கடக்கும் என்.எச் சர்வீஸ் சாலையை அந்த நேரங்களில் பயன்படுத்த வேண்டாம். திருப்பூர் மாவட்டத்தில் கௌசிகா நதியும் நொய்யல் ஆறும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் குடியிருப்பு வீடுகளில் உள்ளோர் கவனமாக இருக்க வேண்டும்.

கோவையைப் பொறுத்தவரை உக்கடம் பகுதியில் பெரியகுளம் ஏரி தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில், குடியிருப்பில் வசிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். மேலும், வாலாங்குளம் பகுதியில் ஏரிக்கு தெற்குப் பகுதியில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வடகிழக்குப் பகுதியில் இருப்பவர்களும் கவனமாக இருக்கவும். குறிச்சி குளம் கிழக்குப் பகுதியில் வசிப்பவர்கள் கவனமாக இருக்கவும் ஆச்சான் குளம் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.