வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (05/10/2018)

கடைசி தொடர்பு:14:30 (05/10/2018)

குப்பை அள்ளும் வாகனத்தில் மருந்துப் பொருள்கள் - திருப்பூர் சுகாதாரத்துறை அலட்சியம்

திருப்பூரில் குப்பை அள்ளும் வாகனங்களில் அரசு சுகாதார நிலைய மருந்துப் பொருள்கள் கொண்டு செல்லப்படும் அவல நிலை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மருந்துப் பொருட்கள்

திருப்பூர் ரயில்நிலையம் அருகே மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் ஈஸ்வரமுர்த்தி தாய் - சேய் நல விடுதி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இயங்கி வருகிறது. கோவை மாவட்டத்திலிருந்து இங்குள்ள சுகாதார நிலையத்துக்குத் தேவையான மருந்துகள் கொண்டு வரப்படுகின்றன. பின்னர் இங்கிருந்து பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு மற்ற மண்டலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

திருப்பூர் இந்த நிலையில், நேற்றைய தினம் வழக்கம்போல பகுதிவாரியாக பிரிக்கப்பட்ட மருந்துப் பண்டல்களை, மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைக்கு பயன்படுத்தப்படும் குப்பை அள்ளும் வாகனங்களில் கொண்டு செல்ல அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். தினமும் காலையில் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குப்பைகளை அள்ளும் பணிகளை முடித்துவிட்டு, அப்படியே  அந்த வாகனங்களை வைத்தே மருந்துப் பொருள்களை எடுத்துச் செல்லும் பணியை மாநகராட்சி சுகாதார ஊழியர்கள் மேற்கொண்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களின் ஆரோக்கியத்தை காக்கும் மருந்துகளை இப்படி குப்பை அள்ளும் வாகனங்களில் எடுத்துச்சென்று விநியோகிப்பது மிகவும் அலட்சியமான செயல் என்று கொந்தளித்துப்போனார்கள் மக்கள். இதுதொடர்பாக மாநகர சுகாதாரப் பிரிவு அலுவலர்களிடம் விசாரித்தபோது, ``எந்தவொரு புகாரும் எங்களின் கவனத்துக்கு வரவில்லை என்றும், தொடர்ந்து விசாரிப்பதாகவும் அலட்சியத்தோடு பதில் தெரிவித்திருக்கிறார்கள்.