வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (05/10/2018)

கடைசி தொடர்பு:14:45 (05/10/2018)

வாடகை வீட்டை குட்கா குடோனாக மாற்றிய கும்பல் - சுற்றி வளைத்த குமரி போலீஸ்

நாகர்கோவில் அருகே வீடு வாடகைக்கு எடுத்து குட்கா குடோனாக மாற்றப்பட்டதை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்றரை டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

குட்கா

நாகர்கோவிலை அடுத்த கீழசரக்கல்விளை பகுதியில் ஒரு வீட்டில் குட்கா போதைப்பொருள் பதுக்கி வைப்பதாகக் காவல் துறையினருக்கு இன்று ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் கீழசரக்கல்விளைக்கு விரைந்து சென்றனர். அங்கு லாரியிலிருந்து குட்கா போதைப் பொருளை ஒரு வீட்டில் சிலர் இறக்கி வைத்துக்கொண்டிருந்தனர். காவலர்களைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதில் மேட்டூரைச் சேர்ந்த சுதாகர்(25) கைது செய்யப்பட்டார். லாரியை கோட்டாறு காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் பெங்களூரிலிருந்து குட்கா கொண்டுவரப்பட்டது தெரியவந்துள்ளது. சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை டன் குட்கா இருந்தது தெரியவந்தது. வீட்டை வாடகைக்கு எடுத்து குட்கா பதுக்கி வைக்கும் குடோனாக மாற்றியிருக்கிறார்கள். வீட்டை வாடகைக்கு எடுத்த புத்தேரியைச் சேர்ந்த பிரசாத் மற்றும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.