வெளியிடப்பட்ட நேரம்: 14:06 (05/10/2018)

கடைசி தொடர்பு:14:13 (05/10/2018)

` கருணாஸை இயக்கினால் பெயர் கெட்டுவிடும்!' - அன்பழகன் சந்திப்பும் அறிவாலயத்தின் பதிலும்

சமூகரீதியாகவும் கருணாஸ் அமைப்புக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அவரது சொந்தத் தொகுதியான திருவாடனையில் பத்துப் பேர்கூட அவரை ஆதரித்துப் போராடவில்லை.

` கருணாஸை இயக்கினால் பெயர் கெட்டுவிடும்!' - அன்பழகன் சந்திப்பும் அறிவாலயத்தின் பதிலும்

டிகர் கருணாஸ் மீதான வழக்குகளில் வேகம் காட்டிக் கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. `கருணாஸை இயக்குவது தினகரன்தான். தி.மு.கவுக்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. சொல்லப் போனால் அரசியல் கட்சிகளின் நம்பிக்கையை இழந்துவிட்டார் கருணாஸ்' என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள். 

சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவான நடிகர் கருணாஸ். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்ததற்காகக் கைதான அவர், ஜாமீனில் வெளியில் வந்திருந்தார். இதையடுத்து, புளியங்குடியில் நடந்த அடிதடி வழக்கு ஒன்றில் அவரைக் கைது செய்ய தீவிரம் காட்டியது நெல்லை காவல்துறை. ' அடுத்தடுத்த வழக்குகளைப் போட்டு என்னை முடக்கப் பார்க்கிறார்கள்' எனக் கொந்தளித்த கருணாஸ், மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நேற்று முன்தினம் சேப்பாக்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன், அவரைச் சந்தித்துப் பேசியது அரசியல் ரீதியாகக் கவனிக்க வைத்தது. சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லை எனச் சட்டமன்றச் செயலாளரிடம் கருணாஸ் மனு கொடுத்திருக்கும் வேளையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. 

``கருணாஸை தி.மு.க இயக்கவில்லை. மருத்துவமனையில் ஜெ.அன்பழகன் சென்று சந்தித்தது என்பது தனிப்பட்ட நிகழ்வு. அதற்கும் கட்சிக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. விருகம்பாக்கம் பகுதிக் கழகச் செயலாளரான தனசேகரன் கூறியதன் பேரில்தான் கருணாஸை சந்தித்தார் அன்பழகன். அதுவும், இவர்களைச் சுற்றியிருக்கும் சில தனிப்பட்ட நபர்களின் வற்புறுத்தல்தான் காரணம். சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லை எனக் கூறி மனு கொடுத்திருக்கிறார் கருணாஸ். இந்த விவகாரத்தில் தி.மு.க அவரை ஆதரிக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது. அவரை மட்டுமல்ல, எந்தவோர் உறுப்பினரையும் தகுதிநீக்கம் செய்வதில் தி.மு.கவுக்கு உடன்பாடில்லை. அதேநேரம், கருணாஸை நம்பிக்கைக்குரிய ஒரு மனிதராக ஸ்டாலின் பார்க்கவில்லை" என விவரித்த தி.மு.க நிர்வாகி ஒருவர், 

கருணாஸ், ஜெ.அன்பழகன் சந்திப்பு

``எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 11 எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு ஓ.பி.எஸ் செய்ய முடியாததை 18 எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு டி.டி.வி செய்ய முடியாததை கருணாஸால் செய்ய முடியாது என்பதுதான் உண்மை. முக்குலத்தோர் புலிப்படை எனக் கட்சிக்குப் பெயர் வைத்திருக்கிறார். ஆனால், சமூகரீதியாகவும் கருணாஸ் அமைப்புக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அவரது சொந்தத் தொகுதியான திருவாடனையில் பத்துப் பேர்கூட அவரை ஆதரித்துப் போராடவில்லை. இதன் காரணமாகத்தான் அவர் மீது அடுத்தடுத்த வழக்குகளைப் போடுகிறது தமிழக அரசு. தற்போது கடன் நெருக்கடியில் இருக்கிறார் கருணாஸ். அவருடன் இருந்தவர்கள் செய்து வந்த வட்டித் தொழிலுக்கும் இவரது பேச்சால் பிரச்னை ஏற்பட்டுவிட்டது. அவர்களைத் தேடித் தேடி அச்சுறுத்தி வருகிறது காவல்துறை. பிற அரசியல் கட்சிகளும் கருணாஸை நம்பவில்லை. அவரது அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துவிட்டதாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. தி.மு.கவும் அவரை ஒரு பொருட்டாகப் பார்க்கவில்லை. சொல்லப் போனால், கருணாஸை இயக்கிப் பெயரைக் கெடுத்துக்கொள்ள தி.மு.க விரும்பவில்லை" என்றார் விரிவாக. 

``கருணாஸ் பேசிய பேச்சை இன்னமும் எடப்பாடி பழனிசாமி மறக்கவில்லை. சபாநாயகருக்கு எதிராக மனு கொடுக்க வைத்து, கருணாஸை பலிகொடுத்துவிட்டார் தினகரன் என்பதுதான் உண்மை. கருணாஸ் கைது செய்யப்பட்டதை அவரது சொந்தத் தொகுதி மக்களே வரவேற்கிறார்கள். `கருணாஸை, ஸ்டாலினும் டி.டி.வியும் ஆதரிப்பது தன்னுடைய செல்வாக்கை உயர்த்தும்' என நம்புகிறார் முதல்வர். அதனால்தான், அவர் மருத்துவமனையிலிருந்து வெளிவரும் நேரத்துக்காகக் காத்திருக்கிறது நெல்லை போலீஸ்" என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.