வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (05/10/2018)

கடைசி தொடர்பு:14:20 (05/10/2018)

`தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்!' - ஷோபியாவின் தந்தை நீதிமன்றத்தில் மனு

பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஷோபியாவின் தந்தை ஏ.அந்தோணி சாமி தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனு ஏற்கப்பட்டதுடன் விசாரணை வரும் 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 

நெல்லையில் கடந்த செப்டம்பர்  2-ம் தேதி நடைபெற்ற பா.ஜ.க., விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து  தூத்துக்குடிக்கு இண்டிகோ விமானத்தில் பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை வந்தார். அதே விமானத்தில், கனடாவில் பி.எச்.டி., ஆய்வு செய்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த லூயிஸ் ஷோபியா தன் தந்தை அந்தோணிசாமி மற்றும் தாய் மனோகரி ஆகியோருடன் பயணம் செய்தார்.

விமானத்தில், தமிழிசையை நோக்கி கைகளை உயர்த்தி, ``பாசிச பா.ஜ.க., ஒழிக" என கோஷம் எழுப்பினார் ஷோபியா. தூத்துக்குடியில் விமானம் தரை இறங்கியதும் அப்பெண்ணுக்கும் தமிழிசைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பெண்ணின் மீது தமிழிசை செளர்ந்தரராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 15 நாள்கள் ஷோபியாவை நீதிமன்றக் காவலில் வைக்க தூத்துக்குடி ஜே.எம்-3 நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஜாமீன் கோரிய மனு விசாரணையில், ஷோபியாவுக்கு  நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது நீதிமன்றம். இவ்வழக்கின் முதல் நாள் விசாரணையின் போது, புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஷோபியாவிடமிருந்து பாஸ்போர்டை பெற்றுக் கொண்ட போலீஸார் 7ம் தேதி விசாரணைக்குப் பின்னர் திரும்ப ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழிசை மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஷோபியாவின் தந்தை அந்தோணிசாமி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு அளித்தார். இதன்படி, கடந்த 24ம் தேதி ஷோபியா, அவரது தந்தை, புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமலை ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழிசை மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஷோபியாவின் தந்தை அந்தோணிசாமி தூத்துக்குடி ஜே.எம்-3 நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் வழக்கு விசாரணை வரும் 10-ம் தேதிக்கு நீதிபதி தமிழ்ச்செல்வி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து ஷோபியாவின் வழக்கறிஞர் அதிசயக்குமாரிடம் பேசினோம், ``தூத்துக்குடி விமான நிலையத்தில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி தமிழிசை மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடக்கோரி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்ததற்கு மனுரசீது மட்டுமே வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 14ம் தேதி எஸ்.பி.,யிடமும் மனு அளித்தோம். ஒரு மாதம் ஆன நிலையில் இது வரையிலும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. எனவே, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி ஜே.எம்-3 நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு ஏற்கப்பட்டு, வரும் 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது." என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க