வெளியிடப்பட்ட நேரம்: 14:24 (05/10/2018)

கடைசி தொடர்பு:14:24 (05/10/2018)

நடிகர் ரன்வீர் ஷா எங்கே? -  சிலைக்கடத்தல் பிரிவு போலீஸாரிடம் வழக்கறிஞர் தகவல் 

நடிகர் ரன்வீர் ஷா பண்ணை வீட்டில் சோதனை

நடிகர்  ரன்வீர் ஷா எங்கு இருக்கிறார் என்ற தகவலை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் வழக்கறிஞர் தங்கராசு தெரிவித்துள்ளார். 

சென்னை சைதாப்பேட்டையில் குடியிருக்கும் நடிகரும் தொழிலதிபருமான ரன்வீர் ஷாவின் பங்களா வீட்டிலிருந்தும் பண்ணை வீடுகளிலிருந்தும் ஏராளமான உலோகச் சிலைகள், கல் தூண்கள், கற்சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதுதொடர்பாக விசாரணை நடத்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ரன்வீர் ஷாவுக்கு சம்மன் அனுப்பினர். மேலும், வெளிநாடுகளுக்கு அவர் தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர். தற்போது அவர் சென்னையில் இல்லை. இதனால் விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் வேண்டும் என்று ரன்வீர் ஷாவின் வழக்கறிஞர் தங்கராசு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் கேட்டார். முதலில் அக்டோபர் 20-ம் தேதி வரை காலஅவகாசம் வேண்டும் என்று வழக்கறிஞர் தங்கராசு கேட்டார். ஆனால், அதற்கு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சம்மதிக்கவில்லை. தொடர்ந்து அக்டோபர் 10-ம் தேதி ரன்வீர் ஷா ஆஜராகுவார் என்று வழக்கறிஞர் தங்கராசு தெரிவித்தார். அதை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஏற்றுக்கொண்டனர். 

இதுகுறித்து வழக்கறிஞர் தங்கராசுவிடம் கேட்டதற்கு, ``கடந்த சில மாதங்களுக்கு முன், ரன்வீர் ஷாவின் தந்தை இறந்துவிட்டார். அவரின் அஸ்தியை கங்கையில் கரைக்க அவர் வடஇந்தியாவுக்குச் சென்றுள்ளார். ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரன்வீர் ஷா எங்கும் ஓடி ஒளியவில்லை. அவர் தலைமறைவாகவும் இல்லை. சட்டப்படி இந்த வழக்கை நாங்கள் எதிர்கொள்வோம். ரன்வீர் ஷா,  தந்தையின் அஸ்தியை கரைத்துவிட்டு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் வரும் 10-ம் தேதி ஆஜராகுவார்" என்றார். 

 நடிகர் ரன்வீர் ஷா வீட்டில் சோதனை

இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் உயரதிகாரியிடம் கேட்டதற்கு, ``ரன்வீர் ஷாவின் வீடுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் குறித்து விசாரணை நடத்த அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தோம். அவரிடம் இன்று விசாரணை நடத்த முடிவு செய்திருந்தோம். ஆனால், அவர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி காலஅவகாசம் கேட்டார். அவர் நீண்ட நாள்கள் காலஅவகாசம் கேட்டதற்கு அனுமதியளிக்கவில்லை. தொடர்ந்து காலஅவகாச நாள்களை வழக்கறிஞரே குறைத்து வரும் அக்டோபர் 10-ம் தேதி ஆஜராகுவார் என்று உறுதியளித்துள்ளார். அதன்படி ரன்வீர் ஷாவின் வீடுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் குறித்து விசாரணை நடத்தவுள்ளோம். ஏற்கெனவே சிலை வைத்திருப்பதற்கான ஆவணங்கள் இருப்பதாக ரன்வீர் ஷா வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். அந்த ஆவணங்களையும் ஆய்வு செய்தபிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

ரன்வீர் ஷாவை கைது செய்வீர்களா என்று கேட்டதற்கு, ``விசாரணைக்குப் பிறகுதான் அதுதொடர்பாக முடிவெடுக்கப்படும். மேலும், ரன்வீர் ஷாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் குறித்த தகவல்களை நாங்கள் சேகரித்துவருகிறோம். இந்தச் சிலைகள் எந்த கோயில்களிலிருந்தவை என்ற தகவல் அடிப்படையில்தான் எங்களின் விசாரணை இருக்கும்" என்றார்.