வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (05/10/2018)

கடைசி தொடர்பு:16:15 (05/10/2018)

கேரள எல்லையில் கொரில்லா தாக்குதல்? - விசாரணை வளையத்தில் மாவோயிஸ்ட் டேனிஷ்

கொரில்லா தாக்குதல் நடத்த இருந்த மாவோயிஸ்ட் டேனிஷ்

கேரள மாநிலத்துக்கு  உட்பட்ட அகழி வனப்பகுதியில் பதுங்கி இருந்து, கொரில்லா தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக, கோவை புலியகுளத்தைச் சேர்ந்த டேனிஷ் என்பவர், கேரள போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பிவருகிறது.' 

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்துக்கு உட்பட்ட அகழி வனப்பகுதியில், மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாகவும், அவர்கள் கொரில்லா தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வருவதாகவும் பாலக்காடு உதவி காவல் காண்காணிப்பாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அகழி போலீஸாரும் நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸாரும்  அகழி வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டைக்கு உட்படுத்தப்பட்டனர். அந்தத் தேடுதல் வேட்டையில்,  சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில், அந்த இளைஞரின் பெயர் டேனிஷ் என்பதும், அவர்  மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. கோவை புலியகுளம் பகுதியில் வசித்துவந்த டேனிஷ்,  கடந்த  இரண்டு ஆண்டுகளாக அட்டப்பாடி வனப்பகுதி  மவோயிஸ்ட்டுகளுடன் இணைந்திருப்பதாகத் தகவல் வந்துள்ளது. கடந்த ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் கைதுசெய்யப்பட்ட பின்னர், தமிழ்நாடு,கேரள எல்லைப் பகுதிகளில் ஆட்களை ஒன்றிணைக்கும் பணியில் டேனிஷ் ஈடுபட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

கைதுசெய்யப்பட்ட டேனிஷை பாலக்காடு எஸ்.பி அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். முதற்கட்டமாக,  கேரள  எல்லைப்பகுதியில் கொரில்லா தாக்குல்  நடத்தத் திட்டம்தீட்டிய தகவல் வெளிவந்திருப்பதாகக் காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.