வெளியிடப்பட்ட நேரம்: 15:49 (05/10/2018)

கடைசி தொடர்பு:15:49 (05/10/2018)

``ஓ.பன்னீர்செல்வத்துக்குக் காத்திருக்கும் இடைத்தேர்தல் அக்னிப் பரீட்சை..!''

எடப்பாடி பழனிசாமி பன்னீர்செல்வம்

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளின் இடைத்தேர்தல்களால் அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே அக்னிப் பரீட்சை ஆரம்பமாகி இருக்கிறது. 

இடைத்தேர்தல் என்றாலே அங்கு ஆளும்கட்சிதான் வெற்றிபெறும் என்ற சமீபத்திய வரலாறுகளை உடைத்தெறிந்தவர் டி.டி.வி.தினகரன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர் வகுத்த அதிரடி அரசியல் வியூகங்களால் ஆளும் அ.தி.மு.க., எதிர்க்கட்சியான  தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடத்துக்கு வந்தார் டி.டி.வி.தினகரன். அதே பாணியில் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் முன்வேலைகளை ஜரூராகச் செய்துகொண்டிருக்கிறார். அவரைப்போலவே, தி.மு.க-வும் ஒரு டீமைக் களத்தில் இறக்கியிருக்கிறது. திருவாரூர் தொகுதிமீது அதீக அக்கறையுடன் தி.மு.க செயல்படுகிறது. அதேநேரத்தில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலும் தங்களுக்குச் சாதகமாகவே இருக்கும் என்று தி.மு.க தரப்பு நம்புகிறது. 

இந்நிலையில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நிர்வாகிகள் கூட்டத்தை நேற்று மதுரையில்அ.தி.மு.க கூட்டியது. இடைத்தேர்தல் ஆலோசனைக்கு, நாள் குறித்த தேதியிலிருந்து டி.டி.வி.தினகரனுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் மீண்டும் மோதல் வெடித்துக் கிளம்பியிருக்கிறது. ``ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைவிட அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் திருப்பரங்குன்றத்தில் ஜெயிப்போம்" என்று டி.டி.வி.தினகரன் பேசி வருகிறார். அ.தி.மு.க-வில் மோதல் வெடித்தபோது, முதன்முதலில் தனது வலிமையைக் காட்ட, மதுரை மேலூரில்தான் பொதுக்கூட்டம் போட்டார் டி.டி.வி.தினகரன். முன்னாள் எம்.எல்.ஏ மேலூர் சாமி, ஏற்பாட்டில் மதுரைக் கூட்டம் தந்த உற்சாகம்தான் அவரை இப்படிப் பேச வைக்கிறது என்கின்றனர், விவரமறிந்தவர்கள்.

இந்தநிலையில்தான், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேலைகளை ஆளும் கட்சியான அ.தி.மு.க முடுக்கிவிட்டுள்ளது. ஆட்சிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைவராக இருந்தாலும், கட்சிக்கு ஓ.பன்னீர்செல்வம்தான் தலைவர். எனவே, அவர் தலையில்தான் இடைத்தேர்தல் பொறுப்பு விழுந்துகிடக்கிறது. மேலும், அதுபோல, திருவாரூர் இடைத்தேர்தல் பொறுப்புக் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம் தலையில் விழுந்துள்ளது. இதில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்டுள்ளது. உதயகுமார், செல்லூர் ராஜு ஆகிய அமைச்சர்களின் துணையோடுதான் இந்த அக்னிப் பரீட்சையில் வெற்றிபெறக் களம் இறங்கியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

எனவேதான், மதுரையில் நேற்று நடந்த இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ``32 ஆண்டுக்காலம் அம்மா (ஜெயலலிதா) உடனிருந்து திரும்பவும் அவர்களே ஆட்சியையும், கட்சியையும் கபளீகரம் செய்யும் சூழல் ஏற்பட்டபோது... நாம் வெகுண்டெழுந்து இணைந்தோம்; அதுதான் வரலாறு. விரைவில் திருப்பரங்குன்றம் தேர்தல் வரவிருக்கிறது. இந்தத் தேர்தலில் நம் முன்னே நிற்பவர்கள் நம்முடைய அரசியல் எதிரியான தி.மு.க.; இன்னொருவர் துரோகி தினகரன். அவர் வெற்றிபெறுவதற்காக வரவில்லை. நம்மைப் பலவீனப்படுத்தி நம்மைத் தோல்வியடைச் செய்வதற்காகவே வந்திருக்கிறார். அதை முறியடிக்கும் வகையில் நம்முடைய தேர்தல் பணிகள் இருக்க வேண்டும். 

தினகரன்

இந்த இயக்கத்தை 45 ஆண்டுக்காலம் இரு பெரும் தலைவர்கள் கட்டிக்காத்து, இந்தக் கோட்டையான திருப்பரங்குன்றம் போலிருக்கும் இந்தக் குன்றை எப்படியாவது குண்டூசியை வைத்து துளைபோட்டுவிடலாம் என்று தினகரன் நினைத்தால் அதனை இங்கிருக்கும் கழகத் தொண்டர்கள், தாய்மார்கள் அனைவரும் முறியடிப்பார்கள். எப்படியாவது நம் இயக்கத்தைப் பலவீனப்படுத்துவதுதான் தினகரனின் ஆசை. அது ஒருபோதும் எடுபடாது. அம்மா பெயரைச் சொல்லிக்கொண்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் நுழைய முடியுமா? முடியாது. மக்கள் ஓடஓட விரட்டி அடிப்பார்கள். இந்தக் கட்சியை, உடைக்கவேண்டுமென்றோ, அழிக்க வேண்டுமென்றோ நினைத்தால்... நினைத்தவர்கள் படுபாதாளத்தில் விழுந்தார்கள் என்பதுதான் வரலாறு. இந்தத் தேர்தலில் கழகத் தொண்டர்கள் கவனமாகச் செயல்பட வேண்டும். கழகம்தான் நமக்கு உயிர்மூச்சு என்று நினைத்து அனைவரும் ஒருங்கிணைந்து, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று எண்ணி, இதுவரை யாரும் பெற முடியாத வெற்றியினை நீங்கள் தேடிதத்தர வேண்டும்'' என்று முழங்கினார்.

ஓ.பன்னீர்செல்வம் பேச்சிலிருந்தே, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை அவர் எப்படி எதிர்பார்க்கிறார் என்பது புரியும். அதுவும், நேற்று அவர் பேசியபோது, ``50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயிப்போம்'' என்று சொன்னார். இதையே, டி.டி.வி.தினகரன் ஆட்கள் தங்களுக்குச் சாதகமாகவே பார்க்கிறார்கள். அதாவது, கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் சீனிவேலு 93,453 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தார். அவர் மரணத்துக்குப் பிறகு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க ஏ.கே.போஸ் 1,13,032 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஆனால், இப்போது, 50,000 ஓட்டுகள் என்று ஓ.பன்னீர்செல்வம் டார்கெட் வைத்துள்ளார். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்கள், ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் அக்னிப்பரீட்சையாக அமைய இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்