வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (05/10/2018)

கடைசி தொடர்பு:17:15 (05/10/2018)

` பெண்களைத் தடுக்க மாதவிடாய் காரணமில்லை' - தகிக்கும் தர்மசாஸ்தா ஐயப்ப மிஷன் தலைவர்

''இளம் பெண்களை சபரிமலையில் அனுமதிக்க மாட்டோம். வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை எங்கள் அமைப்பின் சார்பாக, அங்கு மறியல் போராட்டம் நடத்த இருக்கிறோம். இந்த மலையின் புனிதத்தன்மைகுறித்து கோயிலுக்கு வரும் இளம் பெண்களுக்கு எடுத்துச் சொல்லப்போகிறோம்'' என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார், அகில உலக தர்மசாஸ்தா ஐயப்ப மிஷன் தலைவரான ராஜ மங்கலம். 

ராஜமங்கலம்

அவர், ''சபரிமலைக்கு இளம் பெண்கள் வரக்கூடாது என்று சொல்வதற்கு மாதவிடாய் காரணமே கிடையாது. அது, பெண்களுக்கு கடவுள் கொடுத்த இயற்கையான நிகழ்வு. அதைக் காரணம் காட்டி, பெண்களைத் தடுக்கப்போவதில்லை. உலகில் இருக்கும் மற்ற ஐயப்பன் கோயில்களுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம். ஆனால், சபரிமலையில் பிரம்மச்சாரியாக, யோக நிஷ்டையில் அமர்ந்திருக்கிறார் ஐயப்பன். இங்கே, ஆசாபாசங்கள் அதிகம் கொண்ட இளம் பெண்கள் வரும்போது, அவர்களின் உணர்வுகள், ஐயப்பனின் நிஷ்டையைக் கலைக்கலாம். அதனால் உண்டாகும் பாவம், சம்பந்தப்பட்ட பெண்களையே சேரும். அப்படி எதுவும் நடக்கக் கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு கோட்பாட்டை முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர். இதைத்தான், சபரிமலைக்கு வரப்போகும் பெண்களுக்கு எடுத்துச் சொல்லப்போகிறோம்'' என்றார் சுருக்கமாக.