வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (05/10/2018)

கடைசி தொடர்பு:17:30 (05/10/2018)

`தொடர் மழையை எதிர்கொள்ளத் தயார்!’ - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்குறித்து கடலூர் கலெக்டர் விளக்கம்

கடலூர் மாவட்டத்தில், நேற்று முன் தினம் இரவு முதல் கன மழை பெய்துவருகிறது. மேலும் 3 நாள்களுக்கு கன மழை உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன மழையை எதிர்கொள்ளும் வகையில், மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். 

 

கடலூர் கலெக்டர்

இன்று, கலெக்டர் அன்புச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,  

``முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, மாவட்டத்தில் உள்ள  அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் விடுப்பு எடுக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படும் இடங்கள் என 274 இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் மழை வெள்ள பாதிப்புகளைக் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரபிக் கடலில் புயல் உருவாக உள்ளதால், மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கெனவே கடலூர் மாவட்டத்தில் இருந்து 30 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றிருப்பதாகத் தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில், அவர்கள் உடனே கரை திரும்ப வலியுறுத்தியுள்ளோம். அவர்களில் 15 பேர் கரை திரும்பிவிட்டனர். மீதமுள்ள 15 பேர் மாலைக்குள் கரை திரும்புவார்கள்.

தேவைக்கேற்ப 80 ஆயிரம் மணல் மூட்டைகள், ரேஷன் பொருள்கள், மருந்துகள், படகுகள் என அனைத்தும் இருப்பு  வைக்கப்பட்டுள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு, வெள்ளதால் பாதிக்கப்பட்ட இடங்களில்  தனிக் கவனம் செலுத்தி, அதற்கான அதிகாரிகளை நியமிக்கப்பட்டுக் கண்காணித்துவருகின்றனர்.  புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. கடலூர் மாவட்டத்தில் அதிக அளவு மழை இருக்காது, இருப்பினும் மழை வெள்ளத்தை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் மழைகுறித்து எந்த விதமான பீதியும் அடைய வேண்டாம்'' இவ்வாறு கலெக்டர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.