வெளியிடப்பட்ட நேரம்: 16:09 (05/10/2018)

கடைசி தொடர்பு:16:16 (05/10/2018)

`டி.டி.வி இணைந்தால் அம்மா ஆன்மா சாந்தியடையும்!’ - அதிர்ச்சி கொடுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ

.பி.எஸ், டி.டி.வி.தினகரன் சந்திப்பு நல்ல விஷயம்தான் என்று சூலூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ கனகராஜ் கூறியுள்ளார்.

சென்னை அடையாற்றில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், ``தர்மயுத்தத்தில் ஈடுபட்டிருந்தபோதும் என்னை சந்தித்தார். கனகராஜ்கடந்த வாரம்கூட என்னைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தார்" என ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேசிய வார்த்தைகள் ஆளும்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "அ.தி.மு.க-வுடன் கட்சியை இணைக்க டி.டி.வி.தினகரன் தூதுவிட்டார்’’ என அமைச்சர் தங்கமணியும் விமர்சனம் செய்திருந்தார். 

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய சூலூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ கனகராஜ், ``டி.டி.வி.தினகரனை, ஓ.பி.எஸ் சந்தித்திருப்பார். ஒன்றாக இணைவது குறித்துப் பேசியிருப்பார். ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இணைந்ததை ஏற்றுக்கொண்டோம். அதேபோல, இவர்கள் மூன்று பேரும் இணைந்தால் கட்சிக்கு நல்ல விஷயம்தான். ஒன்றரை கோடி தொண்டர்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள். 'எனக்குப் பின்னாலும் இந்த இயக்கம் மக்களுக்கு சேவை செய்யும்' என அம்மா கூறியிருக்கிறார். அதற்கு, மூன்று பேரும் இணைய வேண்டும். அப்போதுதான், அம்மாவின் ஆத்மா சாந்தி அடையும்.

ஆர்.கே.நகரில் தி.மு.க டெபாசிட்டை இழந்தது. அம்மா இருந்தபோதுகூட இப்படி நடக்கவில்லை. இவர்கள் மூன்று பேரும் இணைந்தால், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் அ.தி.மு.க கைப்பற்றுவதுடன், தி.மு.க-வை டெபாசிட் இழக்க வைக்க முடியும். குருப்பெயர்ச்சி வந்தவுடன், அ.தி.மு.க-வுக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது. குருப்பெயர்ச்சியில் மூவரும் இணைவார்கள் என்ற ஆர்வம் தொண்டர்களுக்கு வந்துவிட்டது. குருப்பெயர்ச்சியில் அ.தி.மு.க-வுக்கு விடிவு காலம் பிறக்கும்" என்று கூறியுள்ளார்.